மும்பையில் பிரசாந்த் கிஷோர்; தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு

நமது நிருபர்




பீஹாரின் பங்கிபூர் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு , ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் மும்பை சென்றார். அங்கு அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன் பார்த் பவார் ஆகியோரை சந்திந்து பேசினார்.

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பங்கிபூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜவிடம் இருந்து தொகுதியை கைப்பற்றியதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினர். தற்போது அவர் மும்பைக்கு சென்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன் பார்த் பவார் ஆகியோரை சந்தித்து 6 மணி நேரமாக பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து இரு தரப்பினரும் மவுனம் காத்தபோதிலும், இது மஹாராஷ்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரசாந்த் கிஷோருடன் சந்தித்து பேச்சு நடத்த சுனேத்ரா தனது அலுவல் பணிகளை ஒதுக்கி வைத்திருந்தார். சமீபத்தில் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே இருவரும், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். பாஜ கூட்டணியில் இணைய அவர்கள் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

அவ்வாறு நடந்தால், தங்களது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று கவலை அடைந்துள்ள சுனேத்ரா பவார், அவரது மகன் பார்த் ஆகியோர், தங்களுக்கு வழிகாட்டும்படி பிரசாந்த் கிஷோரிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement