செப்.,1 முதல் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் துவங்கும் ஏர் இந்தியா

2


புதுடில்லி: எரிபொருள் விலை உயர்வு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை செப்டம்பர் 1ம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் துவங்க உள்ளது.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறு வெளிநாட்டு விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக குறைத்தது. டில்லி-சிகாகோ, டில்லி-நியூவார்க், மும்பை-நியூயார்க், டில்லி-ஷாங்காய், சென்னை-சிங்கப்பூர், மும்பை-டாக்கா மற்றும் டில்லி-மாலே உள்ளிட்ட 7 முக்கிய வழித்தடங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல, 20 முதல் 25 சதவீத உள்நாட்டு சேவைகளையும் நிறுத்தின.

இந்த நிலையில், குறைக்கப்பட்ட தனது விமானச் சேவைகளில் பெரும்பாலானவற்றைச் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஏர் இந்தியா மீண்டும் துவங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், வரும் குளிர்காலத்தில் பல சர்வதேச வழித்தடங்களில் விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அதாவது, சூரிச், வியன்னா, மெல்போர்ன், டோக்கியோ மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களுக்கான விமானச் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Advertisement