காற்றில் பறந்தது ராகுலின் அறிவுரை; கோஷ்டி பூசலால் காங்., கூட்டம் ரத்து

- நமது நிருபர் -

கோஷ்டி பூசலை தவிர்க்குமாறு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விடுத்த எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல், திருச்சி மாவட்ட காங்கிரசார் மோதலில் ஈடுபட்டதால், இன்று நடக்க இருந்த காங்., பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த காங்., மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல், 'தமிழகத்தில் காங்., வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள கோஷ்டி பூசலை தவிர்க்க வேண்டும்.

'கட்சியினரை அரவணைத்து செல்லாதவர்களுக்கு, இனி இடமில்லை' என, எச்சரிக்கை விடுத்தார். அவரது எச்சரிக்கையை காங்கிரசார் கண்டு கொள்ளவில்லை.

'காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, காங்., கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், திருச்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இதை சிறப்பாக நடத்துவது குறித்து, காங்., திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், மாவட்ட பொருளாளர் இளையராஜா, லால்குடி நகர தலைவர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனையின்போது, மாவட்ட தலைவருக்கு நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'சட்டசபை தேர்தலில் எங்களை புறக்கணித்து விட்டு, வேறு நிர்வாகிகளை வைத்து தேர்தல் பணி செய்தீர்கள். இப்போது, பொதுக்கூட்டத்துக்கு நாங்கள் தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என்றால் எப்படி?' என, கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. ஆலோசனை கூட்டத்தை, 40 நிர்வாகிகள் புறக்கணித்து வெளியேறினர்.

மாவட்ட மேலிட பொறுப்பாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, ராஜேந்திரன் ஆகியோரிடம், இரு தரப்பினரும் புகார்கள் கூறியதையடுத்து, கோஷ்டி மோதல் காரணமாக, இன்று நடக்க இருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம் ரத்தாகி உள்ளது.

Advertisement