பல கோடி ரூபாய் மோசடி செய்த சிவானந்த் வீட்டில் சோதனை

2

பெலகாவி: 'சிவம் அசோசியேட்' நிறுவன உரிமையாளர் சிவானந்த் நீலண்ணவர் வீடு, அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பெலகாவி நகரில், சிவம் அசோசியேட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் சிவானந்த் நீலண்ணவர். இவர் தன் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, 40,000 பேரிடம், 4,500 கோடி ரூபாய் வரை வசூலித்து, மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, பெலகாவியின் மாளமாருதி போலீஸ் நிலையத்தில், நடப்பாண்டு மே 15ம் தேதியன்று, வழக்கு பதிவானது. பல கோடி ரூபாய் மோசடி நடந்ததால், இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்தது.

சி.ஐ.டி., அதிகாரிகளின் விசாரணையில், சிவானந்த் நீலண்ணவர் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான மக்களிடம், முதலீடு வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி உட்பட, சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதியும் பெறவில்லை. எனவே இவரை போலீசார் கைது செய்தனர். ஜூலை 13ம் தேதியன்று, இவருக்கு மூன்று லட்சம் ரூபாய் தனிப்பட்ட பாண்ட் பெற்று கொண்டு, நாட்டை விட்டு செல்லக்கூடாது என, நிபந்தனை விதித்து, 93வது சிட்டி சிவில் நீதிமன்றம் சிவானந்த் நீலண்ணவருக்கு ஜாமின் அளித்தது.

சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்துள்ளனர். பொதுமக்களிடம் வசூலித்த பணத்தில், 540 கோடி ரூபாயை ஷேர் மார்க்கெட்டில், முதலீடு செய்திருந்தார். 170 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், முறைகேடு நடந்திருப்பதால் அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது. நேற்று திடீரென பெலகாவிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சிவானந்த் நீலண்ணவரின், பெலகாவியின் சிவபசவ நகரில் உள்ள எம்.எஸ்.டவர் அபார்ட்மென்ட், படகுந்த்ரி கிராமத்தில் உள்ள வீடு, சிக்கோடி தாலுகாவில் உள்ள, அவரது தொழில் பங்குதாரர் சுபாஷ் நந்தரகியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ஆவணங்களை கைப் பற்றினர்.

சிவானந்த் நீலண்ணவர் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் விசாரணை நடத்தி, தகவல் சேகரித்தனர்.

Advertisement