நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்த்தி அறிவிப்பு; வரலாற்றில் இதுவே முதல்முறை என சட்டசபையில் முதல்வர் விஜய் பெருமிதம்

5


சென்னை: நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அவர்மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையினை ஓராண்டில் ரூ.156க்கு மேல் உயர்த்தி வழங்குவது வரலாற்றில் இதுவே முதல்முறை, என்றார்.

தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு: விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளை பயிரிடவும், அறுவடை செய்திடவும், விற்பனை செய்திடவும் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றனர். தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றாலும், நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.


முதல் முறை




பொதுரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.159 அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும். மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையினை ஓராண்டில் ரூ. 156க்கு மேல் உயர்த்தி வழங்குவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

அதேபோல 2025-26 கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 3,290.50 நிர்ணயம் செய்துள்ளது. அதற்கும் மேல் தமிழக அரசால் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 கரும்பு விலையாகக் கிடைக்கப்பெறும்.


5 ஆண்டுகளில்...




கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத் தொகை ரூ. 156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது முதல் ஆண்டிலேயே ரூ. 360.50 உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். மாநில அரசால் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் ரூ. 134க்கு மேல் வழங்குவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

நமது அரசு எப்போதும் விவசாயிகளை ஒருபோதும் விட்டுவிடாமல் அவர்களோடு தோளோடு தோள்கொடுத்து விவசாயம் சிறக்கவும், ஊரக வாழ்வாதாரம் சிறக்கவும் என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Advertisement