'23 வயதில் ஆண்டுக்கு ரூ.10 கோடி வருமானம்!'

'சோர்ஸ்பிளிஸ்' என்ற நிறுவனம் வாயிலாக, சீன தயாரிப்புகளை இறக்குமதி செய்து, நாடு முழுதும் விற்பனை செய்து, ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வரும், திருப்பூர் மாவட்டம், கள்ளப்பாளையத்தைச் சேர்ந்த, 23 வயதாகும் நிவேதா:

அப்பா, விசைத்தறி உரிமையாளர். எனக்கு படிக்கும்போதே தொழில் முனைவோராகும் ஆசை ஏற்பட்டது. நான் எப்போதும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டுமென்று நினைப்பேன். அதேபோல், எவரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பேன். சில தொழில்கள் ஆரம்பித்தேன்; அவற்றில் கிடைத்த அனுபவங்களே, இப்போது என்னை வெற்றிகரமான தொழில் முனைவோராக்கி உள்ளது.

என்ன பொருள் வாங்கி விற்கலாம் என தேடி அலைந்தேன். முதலில், 'பென்டிரைவ்' வாங்கி விற்பனை செய்தேன்; அது நல்ல லாபம் தந்தது. அதனால் சீனா சென்று, பல பொருட்களை அங்கிருந்து இறக்குமதி செய்து, இங்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

இங்குள்ள தொழில் முனைவோரை, மாதந்தோறும் தொழில் ரீதியாக சீனாவுக்கு அழைத்து செல்கிறேன். சீனா குறித்தும், சீன பொருட்கள் குறித்தும் சொல்ல, சமூக வலைதளங்களை பயன்படுத்தினேன்.

ஆரம்பத்தில் என்னை, 'ஆர்வக்கோளாறு' என்று ஏளனம் பேசியவர்கள், தற்போது என்னை ஆச்சரியமாக பார்க்கின்றனர். பொதுவாகவே, பெண் என்பதால் மோசமான கேலிப் பேச்சுக்கள் வரவே செய்கின்றன. அவற்றை பொருட்படுத்தாமல், என் குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் இலக்கை நோக்கி செல்கிறேன்.

தற்போது ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 200 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதே என் இலக்கு.

சீனாவை விட நம் நாடு வளர வேண்டும்; அங்கிருக்கும் நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது என் ஆசை. அடுத்ததாக, சொந்தமாக கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனம் உட்பட, 10க்கும் மேற்பட்ட கம்பெனிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதன் வாயிலாக, 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்.

சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள், ஆப்ரிக்கா என, உலகம் முழுக்க செல்லவும் திட்டமிட்டு வருகிறேன்.

Advertisement