தடுப்புக் கட்டை மீது மோதி பொக்லைன் டிரைவர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற பொக்லைன் டிரைவர் சாலையின் தடுப்புக் கட்டையில் மோதி இறந்தார்.

சங்கராபுரம் அடுத்த மல்லாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் ரஞ்சித்குமார், 34; பொக்லைன் டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி பகுதியில் பணி முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்றார்.

கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் அய்யனார் கோவில் அருகே சென்றபோது சாலையின் நடுவில் இருந்த தடுப்புக் கட்டை மீது பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த ரஞ்சித்குமார், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 

Advertisement