திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அத்துமீறல் :காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருநின்றவூர்:திருநின்றவூர் ரயில் நிலையத்தில், இரவு நேரங்களில் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறலில் ஈடுபடும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள், ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. திருநின்றவூர் வழியாக, தினமும் 183 மின்சார ரயில்கள், 50 விரைவு ரயில்கள் மற்றும் 18 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருநின்றவூர் ரயில் நிலையத்தை கோமதிபுரம், கொசவன்பாளையம், கொட்டமேடு, புதுச்சத்திரம், திருமழிசை, நடுக்குத்தகை, பாக்கம், மேலப்பேடு, புலியூர், தாமரைப்பாக்கம் உட்பட, 32 கிராமங்களை சேர்ந்த, 75,000க்கும் மேற்பட்டோர், தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாவது நடைமேடையில், இரவு நேரங்களில், தினமும் காதலர்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
அவர்கள், நடைமேடையில் வெளிச்சம் இல்லாத இடங்களில் அமர்ந்து, பயணியர் முகம் சுளிக்கும் வகையில், அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், திருவள்ளூர் ஆர்.பி.எப்., போலீசார் ரோந்து செல்வதில்லை. இதனால், காதலர்களின் அத்துமீறல்கள் தினமும் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, திருவள்ளூர் ரயில்வே போலீசார், தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, அத்துமீறலில் ஈடுபடும் காதலர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிஞ்சிலே பழுத்து வெம்பி விடும் . ஆண் பெண் இரு பாலருமே வெட்கம் மானம் சூடு ஏதும் இல்லாமல் அலைகிறார்கள்
Pinjile