திருத்தணி முருகன் கோவிலில் 10 நாளில் ரூ.2.52 கோடி காணிக்கை

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 10 நாட்களில், 2.52 கோடி ரூபாயை, உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை வழிபட்டு செல்கின்றனர். மேலும், ஆடி கிருத்திகை உள்ளிட்ட விஷேச நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்வர்.

பக்தர்கள் தங்களது வேண்டுதல்களின்படி, உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

அந்த வகையில், கடந்த 10 நாட்களில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு நாட்கள், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில், 2 கோடியே, 52 லட்சத்து, 74,335 ரூபாய், 165 கிராம் தங்கம், 10.04 கிலோ வெள்ளி போன்றவை, உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement