கட்டட அனுமதிக்காக விண்ணப்பங்கள் காத்திருப்பு!'பெண்டிங்' வைத்துள்ளனர் அதிகாரிகள்

கோவை: மாநகராட்சியில் அதிகாரிகளின் சுணக்கத்தால், கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஒப்புதல் வழங்கப்படாமல் தேங்கியிருக்கின்றன. த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த பின், 'மாநகராட்சி, நகராட்சிகளில் கட்டட அனுமதி ஆன்லைனில் விண்ணப்பித்த 16 நாட்களில் அளிக்க வேண்டும். உள்ளூர் திட்ட குழுமத்தில் இருந்து வரும் விண்ணப்பத்துக்கு ஏழு நாட்களில் அனுமதி தர வேண்டும்.

எல்லா நடைமுறைகளும் ஆன்லைன் மூலமாக தான் நடக்க வேண்டும். நேரில் வரவழைத்தாலோ, காலக்கெடுவை மீறி இழுத்தடித்தாலோ அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என அரசு எச்சரித்தது.

ஆனால் இந்த எச்சரிக்கை, ஏனோ நம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எட்டவில்லை. கடந்த ஒரு மாதமாக கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பதிவு பெற்ற பொறியாளர்கள், 'தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களுக்கு பார்ட்டி பண்ட், அதிகாரிகளுக்கு கப்பம் செலுத்த வேண்டும். செலுத்தாத கோப்புகள் நிறுத்தப்படும். த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படையாகவும், துரிதமாகவும் கட்டட அனுமதி வழங்கி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன' என்கின்றனர்.

விண்ணப்பித்த 5 நாட்களில் உதவி பொறியாளர் கள ஆய்வு செய்து, உதவி நகரமைப்பு அலுவலருக்கு பைலை அனுப்ப வேண்டும். பல பகுதிகளில் விண்ணப்பித்து ஒரு மாதமாகியும் உதவி பொறியாளர் ஆய்வு செய்யவில்லை. 'அப்ளிகேஷன் சப்மிட்டட்' என்கிற ஸ்டேட்டஸில் தான் உள்ளது என்கின்றனர் அவர்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், 'உதவி பொறியாளர் ஆய்வுக்கு பின் உதவி நகரமைப்பு அலுவலர், உதவி கமிஷனர், நகரமைப்பு அலுவலர், துணை கமிஷனர், கமிஷனர் என்று கட்டட அளவை பொறுத்து, விண்ணப்பம் பல பிரிவுகளுக்கு செல்லும்.

உதவி பொறியாளரிடமே தேங்கினால் அனுமதி கிடைக்க மேலும் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடம் கேட்டால் பதில் கிடைப்பதில்லை. உயர் அதிகாரிகள் வெளிப்படையாக செயல்பட்டாலும், கீழ்நிலை அலுவலர்கள் பணியை முறையாக செய்யத் தவறுவதால் சிக்கல் ஏற்படுகிறது' என்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'தமிழகம் முழுவதுமே யு.டி.ஐ.எஸ். சர்வர் இப்போதுதான் சரியாகி உள்ளது. உதவி நகரமைப்பு அலுவலர்கள் புதிதாக பதவியேற்றுள்ளனர். விரைவில் அனுமதி வழங்கப்படும்' என்றனர்.

தமிழகம் முழுவதும் ஒரே சாப்ட்வேர் பயன்படுத்தப்படுவதால், ஆவணங்களை அப்லோடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. அந்தந்த மாநகராட்சிக்கென பிரத்யேக சாப்ட்வேர் இருந்தால் சிக்கல் தீரும் என்கின்றனர் பொறியாளர்கள்.

Advertisement