குர்னுார் பிரார் 'புயல்' வீசுமா... * இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்குமா
காலே: ''குர்னுார் பிரார் மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசி மிரட்டுகிறார். 6.5 அடி உயரம் கொண்ட இவருக்கு, டெஸ்ட் போட்டியில் அறிமுக வாய்ப்பு அளிக்கலாம்,'' என இலங்கை அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' பர்வீஸ் மகரூப் தெரிவித்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் (காலே, ஆக. 15-19, கொழும்பு, ஆக, 23-27) பங்கேற்கிறது. இதற்கான, இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பும்ரா (இடது முழங்கால் வீக்கம்) உடற்தகுதியில் தேறாததால், விலகினார்.
மூவர் போட்டி
இதனால் சிராஜ் உடன் இணைந்து 'வேகத்தில்' மிரட்ட, பிரசித் கிருஷ்ணா/ குர்னுார் பிரார்/ அகிப் நபி என மூவர் போட்டியிடுகின்றனர். அனுபவ அடிப்படையில் கிருஷ்ணா முந்துகிறார். 7 டெஸ்டில் 25 விக்கெட் கைப்பற்றியுள்ளார். ஆனால், அதிக ரன் வழங்குவது இவரது பலவீனம். சமீபத்திய இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 16 ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி, 67 ரன் வழங்கினார். பயிற்சியில் 5 ஓவர் மட்டும் வீசிய நபி, வாய்ப்பு பெறுவது கடினம். பிரசித் கிருஷ்ணா, குர்னுார் பிரார் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.
அசுர 'வேகம்'
கடந்த மாதம் இலங்கை சென்ற இந்தியா 'ஏ' அணியில் பஞ்சாப் வீரர் பிரார், 26, இடம் பெற்றிருந்தார். மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசினார். அதிகாரப்பூர்வமற்ற காலே டெஸ்டில், மொத்தம் 10 விக்கெட் சாய்த்தார். இதனால் அறிமுக வாய்ப்பு பெறலாம்.
இலங்கை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். 3 'ஸ்பின்னர்', 2 'வேகங்களுடன்' இந்தியா களமிறங்கும். 'சுழலில்' ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் இடம் பெறுவது உறுதி. 3வது 'ஸ்பின்னர்' இடத்திற்கு மானவ் சுதார், சரன்ஷ் ஜெயின் போட்டியிடுகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சுதார், 7 விக்கெட் சாய்த்தார். இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக 'ஆப்-ஸ்பின்னர்' சரன்ஷ் ஜெயின், மொத்தம் 7 விக்கெட் வீழ்த்தினார். 7வது இடத்தில் களமிறங்கி 70 ரன் எடுத்தார்.
மானவ் வாய்ப்பு
இது பற்றி மகரூப் கூறுகையில்,''டெஸ்டில் 'ரிவர்ஸ்-ஸ்விங்' முறையில் பந்துவீசி அசத்துவார் பும்ரா. இவர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு. துவக்கத்தில் விக்கெட் வீழ்த்துவதில் சிரமம் ஏற்படும். சிராஜ் சிறந்த பவுலர் என்றாலும், பும்ரா உடன் ஒப்பிட முடியாது. குர்னுார் பிரார் பந்துவீச்சு தான் என்னை கவர்ந்தது. அசுர வேகத்தில் பந்துவீசுகிறார். சமீபத்திய பயிற்சி போட்டியில் இவரது 'பவுன்சர்'களை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்டர்கள் தடுமாறினர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இம்முறை டெஸ்டில் அறிமுக வாய்ப்பு தரலாம். மூன்றாவது 'ஸ்பின்னர்' இடத்திற்கு, பந்தை 'பவுன்ஸ்' செய்யும் திறன் பெற்ற மானவ் சுதாருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.
கேப்டன் சுப்மன் கில், ராகுல் என அனுபவ பேட்டர்கள் இந்திய அணியில் உள்ளனர். பயிற்சி போட்டியில் ரிஷாப் பன்ட் (2, 28 ரன்) சோபிக்கவில்லை. இருப்பினும் ஆபத்தான வீரர். 30-45 நிமிடங்களில் போட்டியின் போக்கை மாற்றிவிடுவார். அதிரடியாக ஆடும் இவர், இலங்கை 'ஸ்பின்னர்'களை பதம் பார்க்கலாம். 'ஆல்-ரவுண்டர்' ஜடேஜாவும் முக்கிய பங்கு வகிப்பார். காலே டெஸ்டில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தலாம். தொடர் 1-1 என 'டிரா' ஆக வாய்ப்பு உள்ளது,''என்றார்.
'காலே மன்னன்'
மகரூப் கூறுகையில்,''இந்திய அணிக்கு இலங்கை 'ஸ்பின்னர்' பிரபாத் ஜெயசூர்யா தொல்லை தரலாம். முதல் டெஸ்ட் நடக்க உள்ள காலே மைதானத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதை கணித்து பந்துவீசுவதில் பிரபாத் வல்லவர். இங்கு அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதனால் தான் 'காலே மன்னன்' என அழைக்கப்படுகிறார். 'வேகத்தில்' அசித்தா பெர்னாண்டோ மிரட்டலாம்,''என்றார்.
மேலும்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
-
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்