பழைய தகவல்களுடன் செயல்படும் திருவள்ளூர் மாவட்ட இணையதளம்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளம், புதுப்பிக்கப்படாமல், பழைய தகவல்களுடனேயே செயல்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை, பொதுமக்கள் எளிதில் பார்வையிடும் வகையில், tiruvallur.nic.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட வரலாறு, அனைத்து துறை விபரங்கள் அடங்கிய கையேடு, துறை அதிகாரிகளின் தொடர்பு எண், அரசு செயல்படுத்தும் திட்டங்கள், அறிவிப்புகள் உள்ளிட்ட தகவல்கள், அந்த இணையதளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிய தகவல்கள் எதுவும் பதியப்படாமல், பழைய தகவல்களுடனேயே அந்த இணையதளம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2024 - 25ம் ஆண்டிற்கான மாவட்ட கையேடு மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2025 - 26 ஆண்டு விபரங்கள் அடங்கிய கையேடு பதிவு செய்யப்படவில்லை.

பள்ளி கல்வித்துறையின், 2020 - 21ம் ஆண்டு விபரங்கள் மட்டுமே உள்ளன. அதற்கு பிந்தைய ஆண்டு விபரங்கள் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

ஊரக வளர்ச்சி துறையில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மட்டுமே உள்ளது. பிற, அரசு திட்டங்கள் குறித்த விபரங்கள் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

அதே போல், வேளாண்மை துறையில், 2021 ஜூன் மாதம் வரையிலான தகவல்கள் மட்டுமே உள்ளன. அதற்கு பிந்தைய ஆண்டுகளின் தகவல்கள் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இப்படி, பழைய தகவல்களுடன், மாவட்ட இணையதளம் இயங்கி வருவதால், சமூக ஆர்வலர்கள், நடப்பு ஆண்டு தகவல்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, புதிய தகவல்கள் அடங்கிய மாவட்ட கையேடு மற்றும் பிற அரசு துறைகளின் புதிய தகவல்களை, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement