அரசு மருத்துவமனையில் புதிய சிறை வார்டு தயார் 

கோவை: மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு சிகிச்சை வழங்க, அரசு மருத்துவமனையில் பிரத்யேக பிரிவு உள்ளது. இங்கு கைதிகளுக்கு 10 படுக்கைகள், காவலர்களுக்கு 10 படுக்கை வசதிகள் உள்ளன.

இப்பிரிவில் உடல்நலமில்லாத கைதிகள் சிகிச்சை பெறுவதால், துப்பாக்கி ஏந்திய போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருப்பர். இக்கட்டடத்தின் மேற்கூரை விரிசல் ஏற்பட்டதால், கடந்த ஜூன் மாதம், புனரமைக்கும் பணிகள் துவங்கின.

இதனால் கைதிகளுக்கு பொது வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அஜித்குமார் எனும் ஒரு கைதி தப்பிய சம்பவம் நடந்தது. இதையடுத்து பொது வார்டில் ஒரு கைதிக்கு இரு போலீசார் நியமித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று சிறை கைதிகள் வார்டு முழுமையாக புதுப்பிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இங்கு தற்போது இரு கைதிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

போலீசார் கூறுகையில், ‘கைதிகள் வார்டுக்கு எதிரே குழந்தைகள் நல பிரிவு  இருப்பதால், ஏசி., எக்சாஸ்டர் பேன் மற்றும், டாய்லெட் கழிவு வெளியேறும் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. காவல் பணியில் உள்ள போலீசாரால் நாற்றத்தை சகிக்க முடியவில்லை. இதை வேறு இடத்திற்கு மாற்றினால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.



Advertisement