குத்துச்சண்டையின் போது விபரீதம்; 11 ஆண்டு கால சிகிச்சைக்குப் பிறகு 33 வயது வீரர் மரணம்

போர்ட்டோ ரிக்கோ: குத்துச்சண்டை போட்டியின் போது காயமடைந்த போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் பிரச்சர்ட் கோலன், 11 ஆண்டு காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஆக.,13) காலமானார்.

கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, விர்ஜீனியாவில் உள்ள ஈகிள் பேங்க் அரினாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த டெரெல் வில்லியம்ஸை எதிர்த்து பிரச்சர்ட் கோலன் சண்டையிட்டார். இந்தப் போட்டியில் வில்லியம்ஸ் தலையின் பின்புறம் தாக்கியதில், கோலனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், சுமார் 221 நாட்கள் கோமாவில் இருந்தார். அதன்பிறகு, அவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்பினாலும், அவரால் குத்துச்சண்டை போட்டிக்கு திரும்ப முடியவில்லை. மாறாக, அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் நிலையே ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்த கோலன், தனது 33வது வயதில் நேற்று காலமானார். கோலனின் மறைவு செய்தியை அவரது தந்தை உறுதிபடுத்தியுள்ளார். இது விளையாட்டு வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement