கட்டுமான பணியில் ஆறு நிலைகளை அறிந்து செயல்படுங்கள்!

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது, அதை சிறப்பாக செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் வீட்டுக்கான கட்டுமான பணிகளை மொத்தமாக திட்டமிடும் போது, அதில் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்று பாருங்கள்.

இதன்படி, வீட்டுக்கான கட்டுமான பணிகள் தொழில்நுட்ப ரீதியாக ஆறு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு நிலையிலும் என்னென்ன வேலைகள் நடக்க வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கட்டுமான பணிகள் துவங்குவதற்கு முந்தைய நிலை, முதல் நிலையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிலத்தை தயார் செய்வது, சீரமைப்பது, மண் பரிசோதனை முடிப்பது வரைபடம் தயாரித்தல், திட்ட அனுமதி பெறுவது போன்ற பணிகள் அடங்கும்.

இதையடுத்து அஸ்திவார நிலையில் நிலத்தில் துாண்கள் அமைவதற்கான இடங்களை அடையாளப்படுத்துதல், அஸ்திவார பள்ளம் தோண்டுதல், பிசிசி கான்கிரீட் போடுதல், கம்பி கூடு வைத்து, தடுப்புகள் ஏற்படுத்தி கான்கிரீட் போடுதல் போன்ற பணிகள் இரண்டாம் கட்டத்தில் முடிக்கப்படும்.

இதையடுத்து ஸ்டெச்சுரல் நிலையில், அஸ்திவார நிலையில் இருந்து துாண்களை எழுப்புதல், தரை மட்டம் நிலையை அடையாளம் செய்தல், தரைமட்ட பகுதியில் மண் கொட்டுதல், கரையான் தடுப்பு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் அடங்கும். இதில் தரை மட்ட பகுதியில் மண் கொட்டி அதை உறுதியாக்குவதுடன் கம்பி கட்டி கான்கிரீட் ஸ்லாப் அமைப்பது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.

இந்த மூன்றாவது நிலையில் பிற பகுதிகளுக்கான ஸ்லாப்கள், மேல் தளத்துக்கான ஸ்லாப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை தொடர்ந்து சுவர்கள் கட்டுவது, அடிப்படை வசதிகளுக்கான பணிகளை மேற்கொள்வது நான்காவது நிலையாக பிரிக்கப்படுகிறது.

இதில் செங்கல் அல்லது மாற்று பொருளை பயன்படுத்தி சுவர்கள் எழுப்பும் பணிகளை மேற்கொள்ளலாம். இத்துடன் வீட்டில் மின்சார இணைப்புக்கான ஒயரிங் பணிகள், பிளம்பிங் இணைப்பு ஆகியவற்றுக்கு தேவையான அடிப்படை பணிகளை முடிக்க வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக, ஐந்தாவது நிலையில், பூச்சு வேலை, தரையில் பதிகற்கள் அமைப்பது, கதவு, ஜன்னல் அமைப்பது, மேல் தளத்தில் வாட்டர் புரூப்பிங் செய்வது போன்ற பணிகள் அடங்கும். ஆறாவது நிலையில் மின்சார, பிளம்பிங் சாதனங்களை அமைப்பது, கட்டடத்தை சுத்தப்படுத்தி உரியவரிடம் ஒப்படைப்பது என வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு நிலைகளை சரியாக புரிந்து பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டால் எவ்வித குழப்பமும் இன்றி சொந்த வீட்டில் நீங்கள் குடியேறலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

***

பாயிண்ட்

ஐந்தாவது நிலையில், பூச்சு வேலை, தரையில் பதிகற்கள் அமைப்பது, கதவு, ஜன்னல் அமைப்பது, மேல் தளத்தில் வாட்டர் புரூப்பிங் செய்வது போன்ற பணிகள் அடங்கும்.

***

Advertisement