மக்கள் மனசு / ரேஷனில் தரமான அரிசி / நடுத்தர வர்க்கம் மகிழ்ச்சி

ஆட்சி மாறிய பின், கெடுபிடியால் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்து விட்டதாக போலீஸ் கூறுகிறது. ரேஷன் கடைகளில் மக்கள் அரிசி வாங்குவது அதிகரித்துள்ளது என அரசின் புள்ளிவிவரம் காட்டுகிறது. என்ன காரணம் என விசாரித்தால், முன்பை விட அரிசியின் தரம் உயர்வாக இருப்பதாக தெரிவித்தனர். உண்மையா என மக்களையே கேட்டோம்...

வாடை வீசவில்லை இப்போது ரேஷன் அரிசி நன்றாகவே இருக்கிறது. கடந்த மாதம் கொஞ்சம் மஞ்சளாக இருந்தது; இந்த மாதம் வெள்ளையாக, குறுணை போல் நன்றாக இருக்கிறது. முன்பு ரேஷன் அரிசி சமைத்தால் ஒருவித வாடை வரும். இப்போது வாடை வீசவில்லை. பச்சரிசியும் நன்றாக உள்ளது. குறை சொல்ல முடியாது. -–-யசோதா, பச்சாபாளையம்

அருமை தெரியவில்லை த.வெ.க. ஆட்சி வந்த பிறகு ரேஷன் அரிசியின் தரம் உயர்ந்திருக்கிறது. இலவசமாக கொடுப்பதால் மக்களுக்கு அதன் அருமை தெரியவில்லை. சும்மா கொடுக்காமல் குறைந்த விலையில் வழங்கலாம். மக்களுக்கு உழைத்து வாழ்வதன் அர்த்தமும் புரியும். அதைத்தான் இந்த அரசு ஊக்குவிக்க வேண்டும்.  –ஜோசப், சவுரிபாளையம்

எல்லா நேரமும் கிடைக்காது இப்போது ரேஷனில் தரமான அரிசி கிடைக்கிறது. ஆனால் சில நேரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. கடையில் கேட்டால் நூறில் 10 மூட்டை இந்த மாதிரி மோசமான அரிசியை சேர்த்து அனுப்பி விடுவதாக சொல்கிறார்கள். பாவமாக இருக்கிறது.‌ நாங்களும் வேறு வழியில்லாமல் அதை சமைத்து சாப்பிட்டு கொள்கிறோம். -–ஆனந்தகுமார், கவுண்டம்பாளையம்

ரேஷன் கடையே மாறியாச்சு ரேஷன் கடைகள் மாறிவிட்டன. முன்பு புழுங்கல் அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும். இப்போது தரமாக இருக்கிறது. பச்சிரியும் நன்றாக இருக்கிறது. மளிகை பொருள் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவது இல்லை. எல்லா நாட்களிலும் பொருட்கள் தருகிறார்கள். தீர்ந்து போய்விட்டதாக சொல்வதே இல்லை. –ஞானகுரு, சலிவன் வீதி

வாங்கவே யோசித்தோம் திராவிட கட்சிகள் ஆட்சி செய்தபோது ரேஷன் அரிசி வாங்குவதற்கு ரொம்பவே யோசித்தோம். அப்படி வாங்கினாலும் கூடுமானவரை நாங்கள் சாப்பிடாமல், நாய்களுக்கு சமைத்து போட்டோம். பலரும் வாங்கி மலிவு விலைக்கு ஓட்டல்களுக்கு விற்றனர். இன்று அது குறைந்துள்ளது. ருசியாக இருப்பதால் நாமே சாப்பிடுகிறோம். –ஜெகதீஸ்வரன், ஒண்டிப்புதுார்

@quote@ எப்போதும் இப்படி தரணும் நாங்கள் பெரும்பாலும் ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்குதான் பயன்படுத்துகிறோம். இரண்டு மாதமாக ரேஷனில் வாங்கிய அரிசி நன்றாக இருக்கிறது. சாதம் சமைக்க பயன்படுத்தி பார்த்தோம். நன்றாகவே இருந்தது. எப்போதும் இப்படி தரஇருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த மாதம் பரவாயில்லை. -–பச்சையப்பன், கோபாலபுரம்quote

அந்த ஆட்சியிலும் தரம் கடந்த ஆட்சிகளிலும் தரமான ரேஷன் அரிசிதான் வழங்கினார்கள். எத்தனை பேர் வாங்கினார்கள் என்பதை பார்த்தாலே இது தெரியும். செறிவூட்டிய சத்து மிகுந்த அரிசி என்பதால்,  சாதம் சமைக்க விரும்பாதவர்கள்கூட இட்லி, தோசைக்கு ரேஷன் அரிசியை தவறாமல் பயன்படுத்துகின்றனர். – கோகுல்நாத், மதுக்கரை

எடை குறைவாக தருவதா? ரேஷன் அரிசி எப்போதும் போல சுமார் தரம் தான். வாங்குகிற எல்லாருமே சாதம் சமைக்க பயன்படுத்துவது இல்லை. தோசை மாவு அரைக்கிறார்கள். கார்டுக்கு 20 கிலோ தர வேண்டும். கோதுமை, பச்சரிசி வாங்கினால் அரிசியை குறைக்கிறார்கள்.  எடையும் குறைத்து தான் தருகின்றனர்.   -–காளீஸ்வரி,சுந்தராபுரம்

Advertisement