வங்கி சேமிப்பு கணக்கு போன்றதே மனித உடம்பு

எலும்பு, மூட்டு பாதிப்புகளுக்கான சிகிச்சை முறை என்ன? அரசு மருத்துவமனை, எலும்பியல் மற்றும் முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் எம்.எஸ். முகுந்தனிடம் கேட்டோம். அவர் பகிர்ந்தவை:



1. மூட்டு தேய்மானம் முதுமையால் மட்டும் வருகிறதா? இதற்கு நவீன சிகிச்சை முறை என்ன?

பல காரணங்கள் உண்டு. வயது ஏறுவதும் ஒரு காரணம். எலும்பு மூட்டில் அடிபட்டாலும் தேய்மானம் வரலாம். முடக்குவாதம், கிருமி தொற்றுகளால் ஏற்படும் அழற்சி நோய் போன்றவற்றாலும் மூட்டு தேய்மானம் ஏற்படலாம். இதற்கு ஸ்டெம் செல், பி.ஆர்.பி (PRP) போன்ற ரீஜெனரேட்டிவ் ட்ரீட்மென்ட் இருக்கிறது. நல்ல நிவாரணம் கிடைக்கின்றது; பக்கவிளைவுகள் இல்லை.



2. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை எப்போது அவசியம்?

தேய்மானம் என்றாலே, மூட்டு மாற்று ஆபரேஷன் அவசியமாகி விடாது. நோயளியின் வலி தாங்கும் தன்மை, மூட்டு தேய்மான அளவு, மூட்டு வளைவு எல்லாம் ஆராய்ந்து தான் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். வலி நிவாரணி, தேய்மானத்தை தடுக்கும் சில கொலாஜன் பெப்டைடு (Collagen Peptide) போன்ற மருந்துகள், பிசியோதெரபி, பி.ஆர்.பி. ஊசி என எதுவும் பலன் தராவிட்டால் மட்டுமே மூட்டு மாற்று ஆபரேஷன் செய்கிறோம். இப்போது துல்லியமாக ரோபோட்டிக் முறையில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. 



3.முதுகுதண்டுவட அறுவை சிகிச்சை எப்போது அவசியம்?

முதுகு வலி இல்லாமலே, முதுகெலும்பு வட்டு வீக்கம் (Disc Bulge) ஏற்படலாம். அது இருந்தாலே, அறுவை சிகிச்சை என்பதில்லை. வேறு வழி இல்லை என்றால் தான் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.



4. எலும்பு புரை இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

மாதவிடாய் நிற்கும் நிலை, புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை எடுப்போர், சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு, எலும்பு புரை வரும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு முன்கூட்டியே பரிசோதனை செய்யப்படும். அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுபவர்களுக்கும் எலும்பு புரை இருக்கிறதா என பரிசோதித்து, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.



5. கால்சியம், விட்டமின்–டி மாத்திரைகள் சுயமாக எடுத்து கொள்ளலாமா?

உடல்வலிக்காக கால்சியம், வைட்டமின் டி  மாத்திரைகள் எடுத்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதனாலேயே சிலருக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வாய்ப்புள்ளது. டாக்டர் பரிந்துரை இல்லாமல், இம்மாத்திரைகளை தொட வேண்டாம். கால்சியம் நிறைந்த உணவு சாப்பிடுவது, சூரிய ஒளியில் நிற்பது மூலம் வைட்டமின்–டி பெறுவதே சிறந்தது.



6. வயதானவர்களுக்கு எலும்பு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?

தசை வலுவிழப்பதால் தான், அடிக்கடி கீழே விழுவது, எலும்பு முறிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நம் உடல் ஒரு வங்கி சேமிப்பு கணக்கு மாதிரியானது. பணம் போட்டு சேர்த்தால், பின்னாளில் செலவழிக்க முடிவது போல, முதுமையில் சில பாதிப்புகள் வராமல் இருக்க இளமையிலே நல்ல உணவு பழக்கம், உடற்பயிற்சி தொடர்ந்து செய்வது அவசியம். 60 வயதில் கூட, தசை வலுவாக்க முடியும். எளிய பயிற்சிகள் செய்தாலே போதும்.

7. எலும்புகள் பராமரிப்பில் என்னென்ன முன்னேற்றங்கள் எதிர்பார்க்கலாம்?

ஸ்டெம் செல் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எலும்பில் ஏற்படும் பிறவி குறைபாடுகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில், மரபணு தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஜப்பானில், ஒரே ஊசியின் மூலம் கீல்வாதம் வராமல் தடுப்பதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஏஐ. தொழில்நுட்பம் மூலம், மரபணு பாதிப்புகளை தடுக்கவும், முன்கூட்டியே அறிவதற்குமான ஆய்வுகள் நடக்கின்றன.



தொடர்புக்கு: mugundhan38@gmail.com

Advertisement