பள்ளிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள்; அரசு பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்

சென்னை; பள்ளி, கல்லுாரிகளில், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம், நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உள்ளது.

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில், அந்த கட்சியினர், கட்சிக் கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகள் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, 'கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை, கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்; அரசியல் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக, விரிவாக விசாரித்து, கல்வி நிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருப்போர் மற்றும் ஊழியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவிகணேசன் என்பவர், பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னும், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

மாணவர்கள் கட்சி முழக்கங்களை எழுப்ப செய்கின்றனர். அதனால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்டோரை, வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடந்தால், அது குறித்து ஆதாரத்துடன் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்' என, மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மேலும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையையும் தள்ளி வைத்தனர்.

Advertisement