நெரூரில் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு

கரூர்:கரூர் அருகே, நெரூர் சுயம்பு அக்னீஸ்வரர் கோவிலில், ௧௭ம் ஆண்டு நாத உற்சவ பெரு விழா இன்று (ஆக.,16) நடக்கிறது.
கரூர் அருகே நெரூரில், சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில், 10 முதல் 12ம் நுாற்றாண்டுக்கு இடைப்பட்ட சோழர் காலத்தில் கட்டப்பட்டது என கூறுகின்றனர். இங்கு கோவிலின் தலபுரணமாக சிவபெருமானிடம், 1,008 அண்டங்களையும், 108 யுகங்களையும், வஜ்ஜிர யாக்கையும், வரமாக பெற்ற சூரபத்மன், வரம் பெற்ற வலிமையால் பிரம்மா உள்ளிட்ட கடவுள்களும், இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும் சொல்ல முடியாத துயருக்கு ஆளாக்கினான். அவனது துன்பம் பொறுக்கமாட்டாது கடவுள்களும், தேவர்களும், சூரபத்மனை அழித்து தங்கள் துயர் நீக்க வேண்டி சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர். அவரும் தஞ்சமடைந்தவர்களின் துயர் நீக்க எண்ணி, தனது நெற்றிக்கண்ணின் ஒளிப்பிழம்பில் இருந்து, ஸ்ரீ முருகப்பெருமானை தோற்றுவித்து அருளினார் என்பது கந்தபுராணம்.
சிவபெருமானுக்கு அக்னி யாகம்
அவ்வாறு தோன்றிய ஸ்ரீ முருகப்பெருமான், சூரபத்மனை போரிட்டு அவனை கொன்றார். சூரபத்மனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தால், கயிலாயம் சென்றடைய முடியாமல், உபயம் வேண்டி நாரதரிடம் ஆலோசனை கேட்டார். சூரபத்மன் அசுரனே என்றாலும், அவனை கொன்றது பாவச்செயலே, அதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுள்ளது. அந்த தோஷம் நீங்க வேண்டுமெனில் பூலோகத்தில் வடக்கில் இருந்து தெற்கு முகமாக பாயும் காவிரி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள, நெரூரில் சிவபெருமானுக்கு அக்னி யாகம் செய்து பாவம் நீங்கப் பெற்றால் கைலாயம் செல்லலாம் என நாரதர் கூறினர்.
அவரின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ முருகப்பெருமானும் அக்னி யாகம் செய்து, சிவபெருமானை வேண்ட அந்த அக்னியில் தோன்றிய சிவபெருமான், ஸ்ரீ முருகப்பெருமான் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி அவர் கைலாயம் சென்றடைய அருள் செய்தார். அவ்வாறு ஸ்ரீ முருகப்பெருமான் வளர்த்த அக்னியில், லிங்க ரூபமாக சிவபெருமான் தோன்றியதால், ஸ்ரீ அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
நெரூரில் அமைந்துள்ள லிங்கத்திருமேனி வேறு எங்கும் காணக் கிடைக்காதது. அக்னி பிழம்பு ரூபத்தில் அமைந்துள்ள சுயம்பு மூர்த்தியாகும். இங்கு, ஸ்ரீ முருகப்பெருமான் அசுரவதத்திற்கு சென்று வந்த போர் கோலத்தில், 12 கைகளிலும் கொன்றாக ஆயுதம் தரித்த நிலையில், ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் என்ற ஆறு திருமுகங்களுடன் சுவாமி அம்பாள் திருச்சன்னதிகளுக்கு நடுவில், சோமாஸ்கந்தரூபமாக சன்னதி கொண்டு கருணைபொங்கும் முகத்தோடு மயில் மேல் வீற்றிருக்கிறார்.
ஸ்ரீ முருகப்பெருமான் போர்க்கோலத்தில் இருப்பதால் இங்கு வள்ளி, தெய்வானை திருமேனிகள் கிடையாது என்பது தனிச்சிறப்பு. அம்பாள் ஸ்ரீ சவுந்தர நாயகி, முருகப்பெருமானின் சன்னதிக்கு வடபுறம் தெய்வீக சிரிப்புடன் தனிச்சன்னதியாக கொண்டு வீற்றிருக்கிறார்.
தலத்தின் தனிச்சிறப்பு
* தன் இன்னுயிரை மாய்த்துகொள்ள எண்ணி, திருவண்ணாமலை கோபுரத்திருந்து குதித்தபோது பகவான் ஸ்ரீ முருகப்பெருமானால் தடுத்தாட்கொண்ட பேறு பெற்ற, ஸ்ரீ அருணகிரிநாதர் முருகனை பற்றி பாடிய திருப்புகழில் குருவும் அடியவர் என தொடங்கி நெருவை நகர்உறை திருஉரு அழகிய பெருமாளே என முடியும், 940வது பாடலில் நெரூர் முருகப்பெருமானை பாடியிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
ஸ்ரீ அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றம்
* அவதுாத மகாஞானியான ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திரர், தன்னுடைய கடைசி காலத்தில் இத்திருத்தலத்தில் வாழ்ந்து ஸ்ரீ அக்னீஸ்வரர், சவுந்தரநாயகியிடம் அனுமதி பெற்ற பின்பே இந்த கோவிலிலிருந்து, ஒரு கல் தொலைவில் ஜீவசமாதியானார். சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வரரை தரிசப்பதன் மூலம் சூரிய தோஷம், திருமணத்தடை, பொருள் முடக்கம், துஷ்ட சகவாச தோஷம், புத்திர தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்றவை விலகும். அத்தகைய பேறுபெற்ற இத்திருத்தலத்தில், ஸ்ரீ அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றத்தினரால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா வெகு விமரிசையாக நடக்கிறது. அந்த வகையில், இன்று நாத உற்சவ விழா காலை, 6:00 மணிக்கு காட்டுப்புத்துார் பிரபாகரன் குழுவினரின் நாதஸ்வரம், தவில் இசை விழா தொடங்குகிறது. பின்னர் அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு இந்துஸ்ரீ குழுவினரின் வீணை இசை, 9:30 மணிக்கு அனைத்து இசை கருவி கலைஞர்களின் நாதசங்கம், 11:30 மணிக்கு அருளாளர் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமி அருளுரை ஆற்றுகிறார்.
மதியம் 2.00 மணிக்கு கரூர் குமார.சாமிநாததேசிகர் குழுவினரின் தேவார, திருவாசக, திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, ௪:30 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்களின் நாத உற்சவ பெருவிழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement