பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய ஆபரேஷன் சிந்தூர்; மனம் திறந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

11


புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ஆபரேஷன் ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெளிவுப்படுத்தி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றி அடைந்தது. இந்த ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானுக்கு தக்க பாடத்தை கற்பித்தது. இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இருந்த வியூகத் திட்டமிடல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதல்முறையாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது; ஒரு நடவடிக்கை துவங்கிவிட்டால், நாட்டின் இறையாண்மையைக் காக்க எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ அவ்வளவு தூரம் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்த வரம்பும் இல்லை. கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை நாங்கள் போராடுவோம்.

இந்தியா அதிக சகிப்புத்தன்மையுடன் இருப்பதை அதன் பலவீனமாகக் கருதக்கூடாது. இந்தியா எந்த எல்லை வரையிலும் செல்லத் தயாராக இருந்தது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாதிக்கப்பட்டவர்களிடம், 'போய் மோடியிடம் சொல்லுங்கள், அவரால் முடிந்ததைச் செய்யட்டும்' என்று கூறியிருந்தனர்.


முதல் கேள்வி




இத்தாக்குதலுடன் தொடர்புடைய எதிரி முகாம்களை அழிப்பதில் கவனம் செலுத்துவதென இந்தியா ஆரம்பத்திலேயே முடிவு செய்திருந்தது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அறிந்த பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

பின்னர், விமான நிலையத்திலேயே நாங்கள் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம். முதலில், அவர் அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள விரும்பினார். அதன்பிறகு என்னிடம் அவர் கேட்ட முதல் கேள்வி, இதைச் செய்தது யார்? இதற்குப் பொறுப்பானவர் யார்? என்பதுதான்.


மன்னிக்கவே கூடாது




உடனடியாக எங்கள் உளவுத்துறையினர் மிகச் சிறப்பாகப் பணியாற்றினர்; குறுகிய காலத்திற்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, துல்லியமாக நடவடிக்கை எடுக்க எங்களால் முடிந்தது; உளவுத்துறையினருக்கு நன்றி. அவர்கள் பூமியிலோ, வானத்திலோ அல்லது பாதாளத்திலோ, எங்கு ஒளிந்திருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று தண்டிப்போம்; அவர்களை மன்னிக்கவே கூடாது என பிரதமர் மோடி கூறினார். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், நம்பகமான உளவுத் தகவல்களைக் கொண்டு, கடந்த 2025ம் ஆண்டு மே 7ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை துவங்கியது.


23 நிமிடங்களில்




மிகவும் ஒருங்கிணைந்த முறையில், வெறும் 23 நிமிடங்களில் நடந்த இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்குள் அமைந்திருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினர் துல்லியமான ராணுவ தாக்குதல்களை நடத்தினர். இந்த நடவடிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அத்துடன் முக்கிய விமான நிலையங்கள் உள்ளிட்ட எதிரியின் பல்வேறு முக்கிய உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன.


88 மணி நேரம்




பாகிஸ்தான் பதிலடித் தாக்குதல்களை நடத்த முயன்றபோது, ​​இந்தியப் படைகள் மேலும் பல பதிலடித் தாக்குதல்கள் மூலம் அவர்களைத் பின்வாங்கச் செய்தன. அணு ஆயுத வலிமை கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்தத் தீவிர மோதல் 88 மணி நேரம் நீடித்தது; இறுதியில் ஒரு பரஸ்பர புரிதலின் அடிப்படையில் மே 10 அன்று மாலை அது முடிவுக்கு வந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மற்றும் ராணுவ வலிமைக்கு இந்த நடவடிக்கை ஒரு சான்றாக அமைந்தது. இவ்வாறு அஜித் தோவல் கூறினார்.

Advertisement