வரும் 28ம் தேதி டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம்
விழுப்புரம்: வரும் 28ம் தேதி நடக்கும் டாஸ்மாக் கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் பங்கேற்கும் என அதன் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் ஏற்படுகிறது. ஆன்லைன் வர்த்தக பிரச்னை, டாஸ்மாக் கடைகள் வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட நிர்வாக பிரச்னைகள் உள்ளன. இதனால், பணியாளர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கக்கூடாது என்பதை வரவேற்கிறோம். ஆனால், அந்த தொகையை வாங்கி தான் கடையின் நிர்வாக பிரச்னைகள் தீர்க்கப்படுகிறது.
கடை நிர்வாக பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால், 10 ரூபாய் வாங்க மாட்டார்கள். நேர்மையான நிர்வாகம் என்ற அரசின் கொள்கையை ஆதரிக்கிறோம். அதற்காக சங்கங்களை அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த 13ம் தேதி சி.ஐ.டி.யூ., – ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட 13 சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி ஒருநாள் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என கூட்டுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கமும் பங்கேற்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.