தலைமையின்றி தள்ளாடும் கடைகோடி ‘சப் டிவிஷன்’
மாவட்டத்தின் கடைகோடி போலீஸ் ‘சப் டிவிஷன்’ தலைமை அதிகாரி, சமீபத்தில் நடந்த கோவில் திருவிழாவில் எதிர்கட்சிக்கு சாதகமாக நடந்துள்ளதாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த ‘வி.வி.ஐ.பி.,’க்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் அந்த அதிகாரி எப்போது வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படலாம் என தகவல் எழுந்தது.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி அந்த போலீஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவருக்கு பதில் யாரையும் நியமிக்கப்படவில்லை. அருகிலுள்ள திருமுதுகுன்றம் போலீஸ் ‘சப் டிவிஷன்’ அதிகாரி கூடுதல் பொறுப்பில் இருந்து வருகிறார். கடைகோடி தலைமை அதிகாரியை மாற்றி இரு வாரங்களுக்கு மேலாகி உள்ளது. மாவட்டத்தின் கடைகோடி ‘சப் டிவிஷன்’ என்பதால் தலைமை அதிகாரியை நியமிக்காததால் கிராம பகுதிகளில் ஏற்படும் சட்டம் – ஒழுங்கு, கொள்ளை, கனிமவளம் திருட்டு போன்ற சமூக விரோத செயல்களை கண்காணிக்கவும், அதனை தடுக்க உத்தரவிட முடியாமல் ‘சப் டிவிஷன்’ தள்ளாடி வருகிறது.
மேலும், தலைமை அதிகாரி இல்லாததால் அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு உத்தரவு போட அதிகாரிகள் யாரும் இல்லை என்று அவர்களும் ‘ஹாயாக’ உள்ளனர்.