அணையில் தண்ணீர் திறந்தும் முதல் போக நெல் சாகுபடி துவக்குவதில் சிக்கல்: ஒட்டான்குளம் கண்மாயை நம்பியுள்ள 500 ஏக்கர் பாசன விவசாயிகள் கவலை
கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. கண்மாய்க்கு கூட்டாறு தொட்டி பாலம் வழியாகவும், சுரங்கனாறு நீர்வீழ்ச்சியிலிருந்தும் நீர்வரத்து இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கனாறு நீர்வீழ்ச்சி அருகே உடைப்பு ஏற்பட்டதால் நீர்வரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் தொட்டி பாலமும் உடைப்பு ஏற்பட்டதால் கண்மாய்க்கு நீர்வரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து, அங்கிருந்து ஒட்டான்குளம் கண்மாய்க்கு தண்ணீரைக் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்டிப்படையில் 2012ல் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மந்தை வாய்க்கால் அருகே 18ம் கால்வாய் குறுக்கே ஷட்டர் அமைத்து அங்கிருந்து கண்மாய்க்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அகற்றம் 2025ல் 18ம் கால்வாய் சீரமைப்பு பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2026 பிப்ரவரியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் செய்வதற்காக மந்தைவாய்க்கால் அருகே கால்வாயின் குறுக்கே இருந்த ஷட்டர்கள் முழுமையாக அகற்றப்பட்டது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையில்தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மந்தை வாய்க்கால் அருகே 18ம் கால்வாயின் குறுக்கே ஷட்டர் சீரமைக்காததால் ஒட்டான்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் தெய்வம், செயலாளர், முல்லைச்சாரல் விவசாய சங்கம், கூடலுார்: 18ம் கால்வாய் சீரமைப்பு பணிக்காக ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர்வரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த ஷட்டரை அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன் அகற்றினர். இதுவரை சீரமைப்பு பணி முடியவில்லை. பெரியாறு அணையில் தண்ணீர் திறந்தும் முதல் போக சாகுபடியை துவக்க முடியவில்லை. கலெக்டர் இந்த விஷயத்தில் நேரில் ஆய்வு செய்து உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 500 ஏக்கர் பரப்பில் உள்ள நெல் சாகுபடி கேள்விக்குறியாகும் என்றார்.
மேலும்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு
-
மதுரையில் புகார் கொடுத்த சிவனடியார் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக புகார்; ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
-
ஆயிரம் சந்தேகங்கள்; இறந்தவரின் பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?
-
காஞ்சியில் இரட்டைக்கொலை; கோவில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
-
1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதால் இருவர் சஸ்பெண்ட்; ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டதால் நடவடிக்கை