ஆயிரம் சந்தேகங்கள்; இறந்தவரின் பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?


இறந்தவர்களின் பான் அட்டை, ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா? யாரிடம் சரண்டர் செய்ய வேண்டும்?

ரா.ரவீந்திரன், சென்னை.

இறந்தவரின் பான் அட்டையை உடனடியாக சரண்டர் செய்ய வேண்டும் என்ற சட்டரீதியாக கட்டாயம் இல்லை. ஆனால், அதை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பது நல்லது.

இறந்தவருடைய பெயரில் இருக்கும் வங்கி கணக்குகள், மியூச்சுவல் பண்டுகள், சொத்துகள் போன்றவற்றை சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மாற்றிய பிறகும், அவருக்கான இறுதி வருமான வரி கணக்கை வாரிசுகள் தாக்கல் செய்த பிறகும் பான் கார்டை ஒப்படைப்பது நல்லது.

ஆதார் அட்டையை ரத்து செய்யவோ, நீக்கவோ, அதிகாரிகளிடம் சரண்டர் செய்யவோ 'இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தில்' அதிகாரப்பூர்வமாக எந்த வழிமுறையையும் சொல்லவில்லை. அதனால், அதை சரண்டர் செய்ய தேவையில்லை.

தங்கத்தில் ஸ்பாட் தங்கத்தின் விலை என்பதை வைத்து எப்படி தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றனர். ஸ்பாட் என்ற வார்த்தையை ஏன் தங்கத்தில் பயன்படுத்துகிறார்கள். அப்படி என்றால் என்ன?

கே. வனிதா, எழுமலை

பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் பொதுவாக இரண்டு வகையான விலை உண்டு. ஒன்று 'ஸ்பாட் விலை' , மற்றொன்று 'முன்பேர வர்த்தக விலை' 'ஸ்பாட்' என்றால், உடனடி வினியோகத்துக்கான தற்போதைய சந்தை விலை என்று அர்த்தம். சர்வதேச தங்க சந்தையில், இப்போது ஒப்பந்தம் செய்து, வழக்கமான ஸ்பாட் செட்டில்மென்ட் காலத்துக்குள் தங்கத்தை பெறுவதற்கான விலையே 'ஸ்பாட் விலை'.

வேறு சில வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் 'அடுத்த மாதம் அல்லது அடுத்த வருடம் இதே தேதியில் இந்த விலைக்கு தங்கம் வாங்குகிறேன்' என்று முன்கூட்டியே முன்பேர ஒப்பந்தம் செய்வர். இந்த 'எதிர்கால ஒப்பந்த விலையிலிருந்து', 'இன்றைய சந்தை விலையை' தெளிவாக பிரித்து காட்டுவதற்காகவே 'ஸ்பாட்' என்ற வார்த்தை பயன்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை பொதுவாக ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு இத்தனை அமெரிக்க டாலர் என்று குறிப்பிடப்படும். 1 ட்ராய் அவுன்ஸ் என்பது 31.10 கிராம். லண்டன் சந்தையின் ஸ்பாட் தங்க விலைதான் உலகளாவிய தங்க சந்தையின் முக்கியமான அளவுகோல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஸ்பாட் விலையை வைத்து நமது ஊர் நகைக்கடை விலையை கணக்கிடுவர்.

டாலரில் இருக்கும் அன்றைய ஸ்பாட் விலையை, அன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை கொண்டு பெருக்குவர். அந்த தொகையை 31.10ல் வகுத்தால், ஒரு கிராம் தங்கத்தின் அடிப்படை ரூபாய் விலை கிடைக்கும். இதற்கு மேல் நமது நாட்டின் இறக்குமதி வரி மற்றும் செஸ் ஆகியவற்றை சேர்ப்பர்.

கடைசியாக, இந்திய வங்கிகள் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்து செலவு, நகைக்கடைகளின் பிரீமியம் லாபம் மற்றும் 3 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றை சேர்த்தால், நீங்கள் கடையில் பார்க்கும் இன்றைய விலை வந்துவிடும்.

நிதி ஆலோசகர், குறிப்பிட்ட மியூச்சுவல் பண்டு திட்டத்தில் பணம் போடலாம் என்று சொல்லும் ஆலோசனைக்கு கட்டணம் தர வேண்டாம் என்கிறார். ஆனால், தங்கள் நிறுவனத்தின் செயலி வாயிலாக பணம் போடுங்கள் என்று சொல்கிறார். அப்படி போடலாமா? அவர் சொல்லும் செயலி வாயிலாக பணம் போடுவதற்கும் எனது டீமேட் கணக்கு வழியாக பணம் போடுவதற்கும் என்ன வித்தியாசம்?

மணிகண்டன், புதுக்கோட்டை

பங்குச்சந்தையிலும் மியூச்சுவல் பண்டிலும் இலவசம் என்று எதுவுமே கிடையாது. நிதி ஆலோசகர் அவருடைய நிறுவனத்தின் செயலி வழியாக முதலீடு செய்ய சொல்வதற்கு காரணம், அவர் 'மியூச்சுவல் பண்ட் வினியோகஸ்தராக' இருப்பார். நீங்கள் அந்த செயலி வாயிலாக முதலீடு செய்யும்போது, நீங்கள் வாங்கும் திட்டம் 'ரெகுலர் பிளான்' என்று அழைக்கப்படும்.

இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு வருடமும் கமிஷனாக அவருக்கு மியூச்சுவல் பண்டு நிறுவனம் கொடுத்துவிடும். இந்த வினியோகஸ்தர் கமிஷன், திட்டத்தின் செலவு விகிதமான 'எக்ஸ்பென்ஸ் ரேஷியோ'வில் பிரதிபலிக்கும். அதனால் தான் அவர் உங்களிடம் நேரடியாக கட்டணம் கேட்கவில்லை.

உங்கள் டிமேட் கணக்கு வழியாக 'டைரக்ட் பிளானில்' முதலீடு செய்தால், இந்த வினியோகஸ்தர் கமிஷன் இருக்காது. இதனால், டைரக்ட் பிளானின் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ பொதுவாக ரெகுலர் பிளானைவிட குறைவாக இருக்கும்.

எந்த மியூச்சுவல் பண்டில் எப்போது முதலீடு செய்வது, எப்போது மாற்றுவது என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும் என்றால், டைரக்ட் பிளானில் முதலீடு செய்து கொள்ளலாம். ஆலோசனை தேவை என்றால், நிதி ஆலோசகர் அல்லது வினியோகஸ்தர் வாயிலாக ரெகுலர் பிளானுக்கு செல்லலாம்.

எனக்கு வயது 77. கொளத்துாரில் உள்ள என் வீட்டை 'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' செய்து தரும்படி பொதுத்துறை வங்கி ஒன்றிடம் தொடர்ந்து கேட்டு வருகிறேன். அவர்கள் லோன் வழங்காமல் தட்டி கழிக்கிறார்கள். காரணமும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். என்ன செய்வது?

ஈ. குருநாதன், சென்னை

நமது நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கி மேலாளர்களுக்கு 'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' கடன் வழங்குவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. முதியவர்கள் காலத்திற்கு பிறகு, அந்த வீட்டை ஏலம் விட்டு பணத்தை வசூலிக்கும்போது சட்ட சிக்கல்கள் வரலாம். வாரிசுகள் பிரச்னை செய்யலாம். அந்த வீடு நினைத்த விலைக்கு விற்பனை ஆகாமல் போகலாம். இதனால், இந்த திட்டத்தை வங்கிகள் வழங்கினாலும், அதன் மேலாளர்கள் அதிகம் பிரமோட் செய்வதில்லை. அதனால் தான், காரணமே சொல்லாமல் உங்களை அலைக்கழிக்கிறார்கள்.

வங்கிகளின் சட்டப்படியே போனால் கூட, இந்த கடனை தரமுடியாது என்று எந்த வங்கியாலும் சொல்ல முடியாது. ஆனால், அது ஒரு நீண்ட சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான போராட்டம்.

எளிமையான வழி சொல்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்குமா என்று பாருங்கள்.

கொளத்துாரில் உள்ள பழைய வீட்டை விற்றுவிட்டு, புறநகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டை வாங்கி கொள்ளுங்கள். மீதமுள்ள பெரும் தொகையை 'மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில்' முதலீடு செய்யுங்கள்.

'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' திட்டத்தை விட மிக நல்ல மற்றும் உத்தரவாதமான மாதாந்திர வருமானம் எந்த தலைவலியும் இல்லாமல் உங்களுக்கு கிடைக்கும்.


வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ-மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம்.

கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்



pattamvenkatesh@gmail.com

98410 53881

Advertisement