மேற்குவங்கத்தில் சோகம்; ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி பலி

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபீத் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தின் பீர்பூமில் நான்கு மாடி தனியார் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு இன்று (ஆகஸ்ட் 17) அதிகாலை 4 மணிக்கு திடீரென தீ பற்றியது. பிறகு தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர்.

இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் யாத்ரீகர்கள் என வட்டாரங்கள் தெரிவித்தன. தீ விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தீ பற்றிய போது சம்பவ இடத்தில் இருந்த கோல்கட்டாவை சேர்ந்த ஒரு பெண் விருந்தினர் கூறியதாவது: ஹோட்டல் முழுவதும் புகை சூழ்ந்தன; இதனால் பலரால் தப்பிக்க முடியவில்லை; பலர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டனர். தப்பிக்கும் வழியைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்தது," என்றார்.

Advertisement