பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை; திமுக- தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்

1


நமது நிருபர்

சென்னை: 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு பரபரப்பான சூழலில் இன்று (ஆகஸ்ட் 17) மீண்டும் சட்டசபை கூடியது; திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பின், முதல் பட்ஜெட் கூட்டத் தொடர், இம்மாதம் 5ம் தேதி தொடங்கியது. அன்று, 2026 - 27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதி அமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார். மறுநாள் காலை, வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை, இரண்டு பட்ஜெட் மீதும் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

'தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை' என தெரிவித்தனர். கடந்த 12ம் தேதி, அமைச்சர்கள் மரியவில்சன், வினோத் ஆகியோர், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசினர். கடந்த 13ம் தேதி முதல், நேற்று வரை, அரசு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் சட்டசபை நடக்கவில்லை. நான்கு நாள் விடுமுறைக்கு பின், தமிழக சட்டசபை இன்று (ஆகஸ்ட் 17) 9.30 மணிக்கு கூடியது.

இன்று முதல், அரசு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு துறை மானிய கோரிக்கை மீதும் பேசுவர். அதன்பின், அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

வெளிப்படைத்தன்மை

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) சட்டசபையில் தவெக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் ஆகியுள்ள நிலையில் முதல்வர் விஜயின் ஆட்சியை சபாநாயகர் பிரபாகர் பாராட்டினார். அவர் பேசியதாவது: மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, புதிய சிந்தனைகளுடன் பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது; விளம்பர வெளிச்சத்தைத் தேடாமல் முதல்வர் விஜய் செயல்பட்டு வருகிறார்; ஊழலற்ற வெளிப்படைத்தன்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது.

எதிர்கால கனவு




தவெக அரசின் முதல் 100 நாட்கள் நாட்காட்டியில் கடந்து செல்லும் நாட்கள் அல்ல; இது தமிழக வரலாற்றில் புதியதொரு மாற்றத்தின் 100 நாட்கள் ஆகும். வாக்குறுதி என்பது தேர்தலுக்கான வார்த்தை அல்ல; மக்களுக்கான பொறுப்பு என்ற உணர்வுடன் செயல்படும் அரசு. வலிமையான, வளமான சமத்துவமான, ஊழலற்ற தமிழகம் என்ற எதிர்கால கனவுக்கு முதல் 100 நாட்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முதன்மை கோப்புகளில் கையெழுத்திட்ட அந்த பொன்னான கரம் நம் முதல்வருடையது.

ஈவெரா, காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக ஏற்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை அரசியல் சிந்தாந்தமாக கொண்ட உண்மையான மக்கள் தலைவர் முதல்வர் தலைமையிலான அரசு இன்றுடன் 100 நாட்களை கம்பீரமாக நிறைவு செய்துள்ளது. இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசினார்.

அமைச்சர் ஆதவ் vs உதயநிதி!

சட்டசபையில் போதைப்பொருள், தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசிய உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதில் அளித்து பேசியதாவது: எங்களுடைய நோக்கம் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது அல்ல; போதை பழக்க வழக்கம் தமிழகம் முழுவதும் அதிகமாகி உள்ளது. எங்களுடைய பிரசாரத்தில் முதல்வர் விஜய் மற்றும் நாங்கள் எல்லா தெருக்களிலும் கஞ்சா, போதைப்பழக்கம் அதிமாக இருக்கிறது.

நீங்கள் அகற்றி விடுங்கள் என்று பெண்கள் சொன்னார்கள். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; போதைப்பொருள் புழக்கத்தால் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன. போக்சோ வழக்குகள் 2023-ல் 6,968-லிருந்து 2024-ல் 10,046 ஆக உயர்ந்துள்ளன. போதைப்பொருள் பழக்கத்துக்கு அடித்தளம் அமைத்த திமுக தோல்வியடைந்துள்ளது. இவவாறு அமைச்சர் ஆதவ் பேசினார்.

இதற்கு, ''எங்கள் ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் சரியாக நடைபெறவில்லை என்றால், அப்போது ED-CID தலைவராக இருந்த அமல்ராஜை தற்போதைய அரசு சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்தது ஏன்? போதைப்பொருள் தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 15 போலீசாருக்கு சில நாட்களுக்கு முன்பு முதல்வர் விருது வழங்கியது ஏன்? இவ்வாறு உதயநிதி கேள்வி எழுப்பினார்.



நீக்கம்




தொடர்ந்து போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது. கிரிக்கெட் போட்டியின்போது மாத்திரை நுணுக்கியதாக கதை விட்ட அமைச்சரிடம் போலீசார் விசாரித்தார்களா என்று உதயநிதி கேள்வி எழுப்பினார்.

திமுக தவெக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் எழுந்தபோது அமைச்சர் ஆதவ் தெரிவித்த ஒரு கருத்தை ஏற்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து அமைச்சர் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

Advertisement