ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு கைரேகை பதிவாகாததால் சிக்கல் 3 மணி நேரம் காத்திருந்து நுகர்வோர் அவதி
திருவாலங்காடு, ஆக. 18–
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு காரணமாக கைரேகை பதிவாகாததால், நுகர்வோர் பொருட்களை வாங்க, மூன்று மணி நேரம் காத்திருந்து அவதியடைந்தனர்.
திருத்தணி தாலுகாவில், திருவாலங்காடு, மணவூர், பூனிமாங்காடு உட்பட ஆறு குறுவட்டங்களில் உள்ள, 74 கிராமங்களில், 137 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகள் வாயிலாக, 65,856 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
அனைத்து ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டுகளுக்கு ஆன்லைன் பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கென, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், இணையம் வாயிலாக இயங்கும் மின்னணு சாதனம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர் கைரேகையை பதித்த பின் தான் பொருட்கள் வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
வாரத்தில் நான்கு நாட்கள் சர்வரில் கோளாறு ஏற்பட்டு, பொருட்கள் வழங்குவதில் தடங்கல் ஏற்படுவதாக, நுகர்வோர் புலம்புகின்றனர்.
நேற்று திருத்தணி தாலுகாவின் பல பகுதிகளில், ரேஷன் கடைகளில் சர்வர் இயங்காததால், கைரேகை பதிவு செய்ய முடியவில்லை. இதனால், மூன்று மணி நேரம் காத்திருந்து, ரேஷன் பொருட்களை நுகர்வோர் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து, திருவாலங்காடு பகுதியை சேர்ந்த நுகர்வோர் கூறியதாவது:
ரேஷனில், காலை 10:00 மணிக்கு பொருட்கள் வாங்க வந்தோம். மதியம் 1:00 மணி வரை சர்வரில் கைரேகை பதிவாகவில்லை.
ஒவ்வொரு மாதமும் இதே நிலை தான் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் மூன்று மணி நேரம் காத்திருந்து தான் ரேஷன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
ரேஷன் கடைக்கான இணைய சர்வரை மேம்படுத்த, மாவட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் கூறுகையில், “மாவட்டம் முழுதும் இன்று சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளது. சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் சீர்செய்யப்படும்,” என்றார்.
மேலும்
-
அடகு கடைக்காரரை தாக்கியவர் கைது
-
ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்
-
ஆட் இன்றைய நிகழ்ச்சி ஆக.18
-
லஞ்சத்துக்கு எதிராக டில்லி மாணவர் உருவாக்கிய இணையதளம்: மக்களிடம் அமோக வரவேற்பு
-
மாணவியிடம் ஆபாச பேச்சு; ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த பெண் ஆசிரியையும் சிக்கினார்
-
சுற்றுலா வந்த வெளி மாநிலதொழிலதிபர் சாவு