ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது  

விழுப்புரம்:விழுப்புரத்தில் புதிதாக கட்டி வரும் ஆளில்லாத வீட்டில், மது அருந்திவிட்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் காளிதாஸ்,48; வழக்கறிஞர். இவர், மாம்பழப்பட்டு இந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். ஆளில்லாத அந்த வீட்டில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் தயா,21; மற்றும் அவரது நண்பர்களான யுவன்ராஜ், கிருஷ்ணா, விஷ்வா ஆகியோர் சென்று, மதுபானம் அருந்தியுள்ளனர். பிறகு, அவர்கள் அருந்திய பீர்பாட்டிலில், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்து வந்து, அதில் திரி போட்டு கொளுத்தி, வீட்டின் சுவற்றில் வீசி சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து தகவலறிந்த, விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பீர் பாட்டில் துகல்களை கைப்பற்றினர். வீட்டின் உரிமயைாளர் காளிதாஸ் அளித்த புகாரின் பேரில், தயா உட்பட நான்கு பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். இதில், தயாவை நேற்று கைது செய்த போலீசார், அவர்கள் பெட்ரோல் பிடித்த பல்சர் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், தொடர்புடைய மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement