திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது

புதுச்சேரி: திருட்டு கார்களுக்கு புதுச்சேரியில் போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த ஷாஜித் அரீப்பரம்பிலை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, ரெயின்போ நகரை சேர்ந்த சவுந்தரராஜன், லப்போர்த் வீதியில் பழைய கார்கள் விற்பனை செய்யும் சதீஷ் என்பவரிடம் ரூ.2.25 லட்சத்திற்கு தனது மனைவியின் பெயரில் கார் வாங்கினார்.

அந்த காரின் ஆவணங்களை கொண்டு, வங்கியில் லோன் பெற விண்ணப்பித்தபோது, அந்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது.

இதுகுறித்து சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், கடந்த 2006ம் ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த சதீஷ், கேரளா, கண்ணுார், சி.கே.ரோட்டை சேர்ந்த ஹம்சா அரீப்பரம்பில் மகன் சோடா பாபு என்ற ஷாஜித் அரீப்பரம்பில், 47; உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 30க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்த வந்த வழக்கில், ஜாமினில் வெளியே சென்ற 12 பேரில், ஷாஜித் அரீப்பரம்பில் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினார். இதனால், ஷாஜித் மீது நிதிபதி கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிடியாணை பிறத்தார்.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான சிறப்புப்படையினர் நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் விசாரித்தபோது, கடந்த 12ம் தேதி ஷாஜித் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் கேரளாவிற்கு சென்று, கேரளா, மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே அலத்துார் பகுதியில் இருந்த ஷாஜித் அரீப்பரம்பிலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கார்களை திருடி, திருடப்பட்ட வாகனங்களை மற்ற நபர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, கோர்ட்டில் ஷாஜித்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு பிடியாணை பிறக்கப்பட்ட குற்றவாளியை, 16 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசாரை சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

Advertisement