ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தும் ஒருங்கிணைக்காத தமிழக அரசு: பின்நோக்கிச் செல்லும் கூட்டுறவு வங்கிகள்

2

மதுரை: இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தும் நகர மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைக்க தமிழக அரசு முயற்சி செய்யாததால் தேசிய, தனியார் வங்கிகளுடன் போட்டியிட முடியாமல் பின்னோக்கி செல்கின்றன.

கூட்டுறவுத் துறையின் கீழ் நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. ரூ.10 கோடி முதல் ரூ.300 கோடி பரிவர்த்தனை அளவில் 126 நகர கூட்டுறவு வங்கிகள் தனித்தனியாக செயல்படுகின்றன. தேசிய கூட்டுறவு வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் அனைத்து விதிகள் நகர, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால் ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்பத்திற்கேற்ப முன்னேறவே இல்லை.

கூட்டுறவு வங்கிகள் மாவட்ட அளவில் சிதறி கிடப்பதால் குறைந்த பரிவர்த்தனை காரணமாக தனியார், பிற தேசிய வங்கிகளுடன் போட்டியிட முடியவில்லை. பிற வங்கிகளின் போட்டியை சமாளிக்க வேண்டுமெனில் அவற்றை ஒருங்கிணைப்பதே தீர்வு என்கிறார் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன்.

அவர் கூறியதாவது:
தேசிய வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மெகா வங்கிகளாக உருவெடுக்கும் போது நகர கூட்டுறவு வங்கிகள் குறைந்த முதலீடு, தொழில்நுட்பம் இன்மையால் கொசுறு போல மாறிவிடும். வணிக வங்கிகளைப் போல 'கோர் பேங்கிங்' வசதி இருந்தாலும் ஒரு மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் இருந்து இன்னொரு மாவட்ட நகர வங்கிக்கு பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ முடியாது.

மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு குறியீட்டு எண் வாங்கி 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பயன்படுத்துகின்றன. வீட்டுக்கடன், கார் கடன் பெறுபவர்கள் எங்கிருந்தும் வங்கிக்கு இ.எம்.ஐ., தொகையை செலுத்த முடியாது. நகர கூட்டுறவு வங்கிகளில் தனித்தனி ஐ.எப்.எஸ்.சி., குறியீட்டு எண் இல்லாததால் புதிதாக இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை.

மாவட்ட கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியாக மாற்றவும், நகர கூட்டுறவு வங்கிகளை மண்டல வங்கிகளாக ஒருங்கிணைக்கவும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் தமிழக அரசு முயற்சி செய்யாததால் கூட்டுறவு வங்கிகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன என்றார்.

Advertisement