என்னை கூட, 'வருங்கால பிரதமர்' என காங்., தொண்டர்கள் அழைக்கின்றனர்: மாணிக்கம் தாகூர் 'காமெடி'

4

மதுரை: ''முதல்வர் விஜயை, 'வருங்கால பிரதமர்' என, தமிழக வெற்றிக் கழகத்தினர் அழைப்பதை, சீரியசாக எடுக்க வேண்டாம்'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு பின், சட்டசபை மானியக் கோரிக்கையில் காங்., அமைச்சர்கள் பேசியுள்ளனர்; இதற்காக முதல்வர் விஜய்க்கு நன்றி.

தமிழகத்தில் த.வெ.க., தலைமையிலான கூட்டணிக்கு, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின் பெயர் சூட்டப்படும்.

எம்.எல்.ஏ.,க்களுக்கு வசதிகள் செய்து தரா விட்டால், 'கட்டிங்' கேட்கும் மாடல் ஆட்சி 'ரிபீட்' ஆகிவிடும்; எனவே, எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

முதல்வர் விஜயை, 'வருங்கால பிரதமர்' என, அவரது கட்சியினர் அழைக்கின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள், என்னை கூடத்தான் பிரதமர், மத்திய அமைச்சர் என அழைக்கின்றனர்; அதையெல்லாம் சீரியசாக எடுக்க வேண்டாம்.

தமிழகத்தில் கல்லுாரி மாணவர்கள், தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் வெளியான கல்வித்துறை சுற்றறிக்கை கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசை ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க விடக்கூடாது என்பதே, தமிழக காங்., நிலைப்பாடு.

இவ்வாறு கூறினார்.

Advertisement