10 ஆண்டுகளில் முதல் முறை; 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி

11


புதுடில்லி: பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது 10 ஆண்டுகளில் முதல் முறையாகும்.

சர்க்கரையின் கையிருப்பில் குறைந்தது 20% சரிவு ஏற்படக்கூடும் என்ற நிலையில், கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. மாதத்திற்கு 10 டன்களுக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்தும் மிட்டாய் தயாரிப்பாளர்கள், குளிர்பான உற்பத்தியாளர்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், இனிப்பு விற்பனையாளர்கள் மற்றும் பிற நிறுவன வாங்குபவர்கள் போன்ற எந்தவொரு மொத்த நுகர்வோரும் 15 நாட்களுக்கு மேல் கையிருப்பை வைத்திருக்கக் கூடாது என்று உணவு அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு நிறுவனம் மாதத்திற்கு 12 டன்கள் சர்க்கரையைப் பயன்படுத்தினால், எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் அது ஆறு டன்கள் கையிருப்பை வைத்திருக்கலாம். இந்த உத்தரவு செப்டம்பர் முதல் நவம்பர் வரை அமலில் இருக்கும்.

கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் துவக்கத்தில் 50 லட்சம் டன்னாக இருந்த கையிருப்பு தற்போது 35-40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் சர்க்கரை விலை அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் சர்க்கரை இறக்குமதிக்கான வரியையும் மத்திய வணிகத்துறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது; வரி விலக்கு சலுகைகளின் கீழ் அக்டோபர் 31ம் தேதி வரை சர்க்கரை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரையின் சராசரி சில்லறை விலை ரூ.52.3 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 13% அதிகமாகும்.

ஜூலை மாதத்தில், சில்லறை விலைகள் 9% க்கும் மேல் உயர்ந்தன. பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்த, ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சர்க்கரை வியாபாரிகளுக்கு வரம்புகளை அரசு விதித்துள்ளது. மேலும், வியாபாரிகள் தங்கள் கையிருப்பை அறிவித்து, அதை வாரந்தோறும் புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

Advertisement