‘டெங்கு’லிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பருவ மழைக் காலத்தில் காய்ச்சல் மற்றும் டெங்குவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
டெங்குவை உண்டாக்கும் ஏடீஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே முட்டையிட்டு பெருகும். பொதுமக்கள் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். வயிற்றுப் போக்கு பரவாமல் தடுக்க குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து அருந்த வேண்டும். சுகாதாரமற்ற துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் குடிநீர் மற்றும் பயன்பாட்டு தண்ணீரைச் சேமித்து வைக்கும் சிமென்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் பேரல்கள் போன்றவற்றில் கொசுக்கள் புகாதாவாறு மூடி வைக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை வீட்டைச் சுற்றி தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள் மற்றும் டயர்கள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் மொட்டை மாடிகள், சன்ேஷடுகள், குளிர்சாதன பெட்டியின் பின்புறமுள்ள வாட்டர் டிரே மற்றும் பூந்தொட்டிகளின் கீழ் தண்ணீர் தேங்க விடக்கூடாது. குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் வீடு வீடாக வரும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, கண், பின்புற வலி போன்ற டெங்கு அறிகுறிகள் மற்றும் வயிற்று போக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சலின் போது அதிக நீர் மற்றும் நீர்ச்சத்து உள்ள ஆகாரங்களை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்.
மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதையும், தேவையற்ற ஊசிகளையும் தவிர்க்க வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தேவையற்ற வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகளை தவிர்க்க வேண்டும். சாதாரன காய்ச்சல் என்று அலட்சியமாக இருந்துவிட்டு நோய் முற்றிய பிறகு தாமதமாக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.