மொபைல்போனுக்கு நேரடி இணைய சேவை: மத்திய அரசிடம் எலான் மஸ்க் மீண்டும் விண்ணப்பம்

1

புதுடில்லி: மொபைல்போனுக்கு நேரடியாக செயற்கைக்கோள் வாயிலாக இணைய சேவை வழங்குவது தொடர்பான திட்டத்திற்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.


உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது. மொபைல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கும் சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவை கிடைக்க வேண்டும் என்பதே ஸ்டார்லிங்க்கின் திட்டம்.


இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்கு பூர்வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில ஒப்புதல்கள் பெற வேண்டி உள்ளது. இதற்கான பணிகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்த தகவலை எலான் மஸ்க் மறுபதிவு செய்துள்ளார்.
அதில் அந்த பயனர் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் 109.3 கோடி பேர் இணையவசதி பெற்றுள்ளனர். அதில் கிராமப்புறத்தில் 44.087 கோடி பேர் கிராமபுறங்களை சேர்ந்தவர்கள். ஆனாலும், 11,256 கிராமங்களில் இன்னு்ம 4ஜி சேவை கிடைக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.
இதனை மேற்கோள் காட்டி எலான் மஸ்க் அளித்த பதிலில் ,'' ஸ்டார்லிங்க் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் உதவும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் விண்ணப்பம்



இதன் இடையே அடுத்த தலைமுறை ஜென் 2 செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு நெட்வோர்க்கை இந்தியாவில் செயல்படுத்துவதற்கு, நாட்டின் விண்வெளி கட்டுப்பாட்டு அமைப்பான இன் ஸ்பேஸ் நிறுவனத்திடம் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்கை நேரடியாக இணைக்க ( Direct to Device) எனும் நவீன தொழில்நுட்பத்திற்கும் அனுமதி கேட்டு ஸ்டார்லிங்க் விண்ணப்பம் செய்துள்ளது.
இதற்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement