பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்
சென்னை: பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, 94, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
சவுகார் ஜானகி கடந்த சில நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று மதியம் 2:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 1952ல் வளையாபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சவுகார் ஜானகி, பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர்நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், காவிய தலைவி, ரங்க ராட்டினம், தில்லு முல்லு, வெற்றி விழா, ஹேராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில், 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தானம் நடிப்பில் வெளிவந்த, பிஸ்கோத் படம் தமிழில், அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமாகும். சவுகார் ஜானகி மறைவுக்கு, திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜயும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சவுகார் ஜானகியின் கணவர் சங்கரமஞ்சி ஸ்ரீனிவாச ராவ் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு, யக்ஞ பிரபா கோட்டி, சாச்சி ராவ் என்ற இரு மகள்களும், வெங்கடரமண சங்கரமஞ்சி என்ற ஒரு மகனும் உள்ளனர்.
ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில், பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவர் சவுகார் ஜானகி. இவரது நிஜப்பெயர் ஜானகி. சினிமாவிற்கு வருவதற்கு முன், அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார்.
கடந்த 1950ல் வெளியான சவுகார் என்ற தெலுங்கு படத்தில் முதல்முதலாக நடித்தார். இந்த படம் வெற்றி படமாக அமைய, ஜானகி என்ற இவரது பெயருக்கு முன், 'சவுகார்' என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது.
சினிமாவில் நடிக்க வரும் போதே இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருந்தது. என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ராஜ்குமார், பிரேம் நசீர் என அன்றைய அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்த பெருமைமிக்கவர்.
எதிர்நீச்சல், தில்லு முல்லு போன்ற திரைப் படங்களின் மூலம், தான் ஒரு நகைச்சுவை நடிகையாகவும் வெற்றி காண முடியும் என்பதை நிரூபித்தார்.
எந்த மொழி படங்களில் நடித்தாலும், அந்தந்த மொழிக்கான உச்சரிப்பை தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசிய பெருமைக்குரியவர், சவுகார் ஜானகி.