ஒரு மாதத்தில் ரூ.12,000 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

5

சென்னை: தமிழக அரசு, கடன் பத்திரங்கள் வெளியீடு போன்றவற்றின் வாயிலாக, கடந்த ஜூலையில் மட்டும், 12,044 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி உள்ளது.

தமிழக அரசுக்கு, வரி வாயிலாகவும், வரி அல்லாத பிற வகையிலும் வருவாய் கிடைக்கிறது. அதன்படி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், நிலம் விற்பனை, விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி, மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசின் வரி பகிர்வு, இதர வரிகள் மற்றும் தீர்வை வாயிலாக, வரி வருவாயும், மத்திய அரசின் மானியம் போன்ற வகையில், வரி அல்லாத வருவாயும் கிடைக்கின்றன.

நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஜூலை வரை, அரசின் மொத்த வருவாய், 89,718 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், வரி விதிப்புகள் வாயிலாக கிடைத்த வருவாய், 82,566 கோடி; வரி அல்லாத வருவாய், 4,070 கோடி; மத்திய மானியம், 3,082 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஏப்., முதல் ஜூலை வரை, மொத்த செலவு, 1.23 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் பற்றாக்குறை, 25,267 கோடி ரூபாய்.

மொத்த செலவில், அதிக அளவாக, ஏற்கனவே வாங்கப்பட்ட கடன்களுக்கு, செலுத்தப்பட்ட வட்டி செலவு, 21,176 கோடி ரூபாயாகவும், ஓய்வூதியத்திற்கான செலவு, 17,237 கோடி ரூபாயாகவும் உள்ளன.

வரவை விட, செலவு அதிகம் இருப்பதால், அரசு, பல்வேறு திட்டங்களுக்கு செலவை மேற்கொள்ள, கடன் வாங்குகிறது. அதன்படி, கடன் பத்திரங்களை வெளியிட்டும், பல்வேறு வங்கிகளிடம் இருந்தும், கடன் வாங்கப்படுகின்றன.

இந்த நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில் வாங்கப்பட்ட கடன், 32,925 கோடி ரூபாயாக உள்ளது. இது, ஜூன் நிலவரப்படி, 20,881 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 12,044 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.

கடந்த, 2025 - 26ம் நிதியாண்டில் ஏப்., முதல் ஜூலை வரை அரசின் மொத்த வருவாய், 85,876 கோடி ரூபாயாகவும், மொத்த செலவு, 1.09 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தன. இந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன், 30,956 கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement