பஸ் வசதியில்லா மலை கிராமங்கள்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவலம்

2

அஞ்செட்டி: நாடு சுதந்திரம் பெற்று, 80 ஆண்டுகள் ஆன நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலை கிராம மக்கள், இன்றைக்கும் பஸ் வசதி இல்லாமல், குதிரை, கழுதைகளை நம்பி வாழும் அவலம் உள்ளது.

கர்நாடக மாநிலம், மேகதாதுவிலிருந்து, 4 கி.மீ., தொலைவில், தமிழக எல்லையில் அமைந்துள்ளது கெஸ்துார் கிராமம். மஞ்சுகொண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட இக்கிராமத்தை சுற்றி, 15 குக்கிராமங்களில், 8,000 பேர் வசிக்கின்றனர்.

அஞ்செட்டி அடுத்த உரிகத்திலிருந்து, கெஸ்துார் வரை, 24 கி.மீ., துாரத்திற்கு தமிழக அரசின் மூலம் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அரசு பஸ் சேவை இல்லை.

நாடு சுதந்திரம் பெற்று, 80 ஆண்டுகள் ஆன போதும், கெஸ்துார், அதை சுற்றியுள்ள கிராம மக்கள், தங்கள் விவசாய விளைபொருட்களை, தங்கள் வளர்ப்பு பிராணிகளான கழுதை, குதிரைகளில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

அரசு சார்பில் பஸ் வசதி செய்தால், 15க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் பயன் பெறுவர். மஞ்சுகொண்டப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

மேல்நிலை கல்விக்கு உரிகம் அல்லது அஞ்செட்டிக்கு மாணவ - மாணவியர் செல்ல வேண்டும்.பஸ் இல்லாததால், பள்ளி இடைநிற்றல், சிறுமியருக்கு குழந்தை திருமணம் ஆகியவை நடக்கின்றன. வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.

இப்பகுதிக்கு, '108' பைக் ஆம்புலன்ஸ் சர்வீஸ் வழங்கப்பட்டி ருந்தாலும், முறையாக இயங்குவதில்லை. தமிழக முதல்வருக்கு, பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் சார்பி ல் மனு அனுப்பப்பட்டது. மனு ஏற்கப்பட்டதாக ஜூனில் பதில் வழங்கப்பட்டது.

தனியார் மூலமாக மினி பஸ் இயக்க முயற்சி நடக்கிறது. ஆனால், மினி பஸ் தேவையில்லை; அரசு பஸ் தான் வேண்டும் என, மக்கள் கேட்கின்றனர்.

உரிகம் - கெஸ்துார் இடையே, அரசு பஸ் இயக்கினால், 15 மலை கிராமங்கள் பயன்பெறும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் கோரிக்கை.

Advertisement