பழைய துணிகளை இனி துாக்கி வீசாதீங்க மறுசுழற்சிக்கு தருமாறு கேட்கிறது மாநகராட்சி
கோவை:வீடுகளில் பழைய துணிகளை என்ன செய்வது என்ற கவலை இனி இல்லை. இவற்றை மறு சுழற்சி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ள மாநகராட்சி, துணிகளை துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தாத, பழைய துணிகள் இடத்தை அடைத்துக்கொள்கின்றன. அதிக விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு, துாக்கி வீச மனம் வராது. ஆனால் அணியவும் மாட்டார்கள்.
சிலர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுப்பர். வீடுதோறும் வந்து சேகரிக்கும் பெண்களிடம் கொடுப்பார்கள். பலர் குப்பையுடன் கலந்து வீசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
குப்பையை நான்கு ஆக பிரிக்கும் தற்போதைய திட்டம் அமலான பிறகு, குப்பையுடன் கலந்து வரும் துணிகளை என்ன செய்வதென்பது புதிய பிரச்னையாக இருக்கிறது.
இந்நிலையில்தான் தனியார் நிறுவனம் முன்வைத்த மறுசுழற்சி திட்டத்தை இறுக பிடித்துக்கொண்டது மாநகராட்சி.
துணியை மறுசுழற்சி செய்யும் இத்திட்டத்தை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் கமிஷனர் ரவி தேஜா நேற்று துவங்கி வைத்தார்.
'இத்திட்டத்துக்கு 'மறு நெசவு' என பெயர் வைத்துள்ளோம். கவுண்டம்பாளையத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. மக்கள், வீடுகளில் பயன்படுத்தாத பழைய துணி உள்ளிட்ட ஜவுளி பொருட்களை வழக்கமான திடக்கழிவுகளுடன் சேர்க்காமல், தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம்.
சேகரிக்கப்படும் ஜவுளி, கழிவு மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். ஜவுளி கழிவு மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையில் செல்வதை குறைப்பதுடன், ஜவுளி பொருட்களை மறுசுழற்சி செய்ய உதவும்.
இதுகுறித்து தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றனர் அதிகாரிகள்.