செய்தி மக்கள் தொடர்பு துறை முறைகேட்டில் சிக்குவது யார்?
“போலி கையெழுத்து போட்டு மாட்டிக்கிட்டாவ வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“துாத்துக்குடி சிவன் கோவில் நிர்வாகத்துல இருக்கும் கீழூர் பத்திரகாளியம்மன் கோவில்ல, தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு இன்னும் இருக்கு... ஆட்சி மாறிட்டதால, இந்த அறங்காவலர் குழுவை அறநிலையத் துறை அதிகாரிகள் மதிக்கவே மாட்டேங்காவ வே...
“கடந்த மூணு மாசமா உண்டியல் காணிக்கையை எண்ணிய ரெண்டு அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவரின் கையெழுத்தை போலியா போட்டு, கணக்கு எழுதியிருக்காவ... இது சம்பந்தமா, அறநிலையத் துறை இணை கமிஷனரிடம், அறங்காவலர் குழு தலைவர் புகார் குடுத்திருக்காரு வே...
“விசாரணையில், அதிகாரிகள் போலி கையெழுத்து போட்டது உண்மைன்னு தெரிஞ்சிட்டு... அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறதால, அவங்க கலக்கத்துல இருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“வாங்க, சுப்பையா... ஊர்ல தமிழ்ச்செல்வி சவுக்கியமாங்க...” என, நண்பரிடம் விசாரித்த அந்தோணிசாமியே, “அஞ்சு பதவிகளுக்கு, 150 பேர் விண்ணப்பிச்சிருக்காங்க...” என்றார்.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தமிழக தகவல் ஆணையத்தில், தலைமை கமிஷனர் மற்றும் எட்டு கமிஷனர்கள் இருக்காங்க... இதுல, அஞ்சு பேர் சீக்கிரமே ஓய்வு பெற இருக்காங்க...
“புது ஆணையர்களை நியமிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில தேர்வு குழு அமைச்சிருக்காங்க... இந்த அஞ்சு பதவிகளுக்கும், 150 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருக்குதுங்க...
“தலைமை கமிஷனரா இருந்து சமீபத்துல ஓய்வு பெற்ற ஷகில் அக்தர், பீஹாரைச் சேர்ந்தவர்... இப்ப, பொறுப்பு தலைமை கமிஷனரா இருக்கிற அதுல்ய மிஸ்ரா, ராஜஸ்தானைச் சேர்ந்தவருங்க...
“தமிழக மக்கள் எல்லாம், தகவல்கள் கோரி தமிழ்ல தான் மனுக்கள் அனுப்புறாங்க... வடமாநில அதிகாரிகளுக்கு இந்த மனுக்களை மொழிபெயர்த்து தரவே, நான்கு ஊழியர்கள் தேவைப்படுதுங்க...
“தமிழகத்துல ஐ.பி.எஸ்., அதிகாரியா வேலை பார்த்து, ஓய்வு பெற்ற ஒடிஷாவைச் சேர்ந்த திரிபாதியை, அந்த மாநில தகவல் ஆணையரா நியமிச்சிருக்காங்க... 'அதே மாதிரி, தமிழகத்துலயும் தமிழ் அதிகாரிகளையே இந்த பதவிகளுக்கு நியமிக்கணும்'னு, முதல்வர் விஜய்க்கு, தகவல் ஆர்வலர்கள் பலரும் மனுக்கள் அனுப்பியிருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“செய்தி மக்கள் தொடர்பு துறை முறைகேடுகள் பத்தி, விசாரணை துவங்க போறது ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“கடந்த தி.மு.க., ஆட்சியில, முன்னாள் அமைச்சர்கள் சிலர், 'பினாமி' பெயர்கள்ல விளம்பர, 'ஏஜன்சி' நடத்தி வாரி குவிச்சா... தனியார் ஏஜன்சி களிடம், 7.5 சதவீதம் கட்சி நிதி கேட்டு நெருக்கடி குடுத்தா ஓய்...
“துறையின் முக்கிய அதிகாரிகளுக்கு ரெண்டு முறை பதவி நீட்டிப்பு குடுத்து, 'கட்டிங்' வாங்கினா... தி.மு.க., சினிமா பாடலாசிரியர் மச்சான் ஒருத்தர், விளம்பர ஏஜன்சி நடத்தி வாரி சுருட்டியதுன்னு, ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துது ஓய்...
“எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா, இந்த துறைக்கு 2024 - 25ம் நிதியாண்டுல, 225 கோடி ரூபாய் தான் ஒதுக்கியிருந்தா... ஆனா, அதை விட கூடுதலா, 215 கோடி ரூபாயை, அதாவது, 440 கோடி ரூபாய் வரை செலவு பண்ணியிருக்கா ஓய்...
“இது சம்பந்தமா, இப்ப விசாரணை நடக்க போறது... 'இதுல, நிறைய பெருந்தலைகள் சிக்கும்'னு, கோட்டை வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
''புதுக்கோட்டை மாநகர த.வெ.க.,நிர்வாகி, அமைச்சர் பர்வேஸ் முகமது நிகழ்ச்சிகள்ல அடாவடியா நடந்துக்கிடுறாரு... 'ரீல்ஸ்' எடுத்து சர்ச்சையை கிளப்பிட்டு இருக்கார்னு முந்தா நாள் பேசியிருந்தோமே... 'அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை'ன்னு அவர் சொல்றாருங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
மேலும்
-
த.வெ.க., மென்மையாக இருந்தால் பா.ஜ.,வும் மென்மையாக இருக்கும்
-
பழைய துணிகளை இனி துாக்கி வீசாதீங்க மறுசுழற்சிக்கு தருமாறு கேட்கிறது மாநகராட்சி
-
அனைத்து துறைகளுக்கும் இரு அமைச்சர்களே பதில்
-
கிரைம் கார்னர்;கோவை
-
இன்றைய நிகழ்ச்சிகள் ...(22.08.20260 கோவை
-
சரிந்தது கரும்பு விளைச்சல் கசக்கிறது சர்க்கரை விலை