சுவீடனில் வாளுடன் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 18 வயது இளைஞர் கைது; ஒருவர் பலி

- நமது நிருபர் -


மத்திய சுவீடனில் உள்ள ஒரு பள்ளியில், வாளுடன் நுழைந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார்; மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு வடமேற்கே அமைந்துள்ள பாகர்ஸ்டா நகரில் உள்ள பள்ளியில் 18 வயது இளைஞர் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறான். அப்பொழுது 400 முதல் 500 மாணவர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தாக்குதலைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை போலீசார் உறுதிசெய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள பல பள்ளிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்திற்கு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் வருத்தம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இந்த வன்முறை செயலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் போலீசார் மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும். இவ்வாறு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் கூறியுள்ளார்.

Advertisement