வெண்கரும்பூர் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை: விவசாயிகள் கோரிக்கை

பெண்ணாடம், ஆக. 23–

வெண்கரும்பூர் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பெண்ணாடம் மற்றும் வெண்கரும்பூர், நந்தப்பாடி, முருகன்குடி, துறையூர், சத்தியவாடி, மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, கிளிமங்கலம், டி.வி.புத்துார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளாற்றங்கரையோரம் உள்ளது. இங்குள்ள விளைநிலங்களில் போர்வெல் பாசனம் மூலம் நெல், கரும்பு மற்றும் வாழை, கத்தரி, கொத்தவரை, முருங்கை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக போதிய மழையின்றி ஆற்றில் நீர்வரத்து கடந்த இரு ஆண்டுகளாக குறைந்து போர்வெல் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. இதனால் பயிர் சாகுபடி பணியை துவக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. வெண்கரும்பூர் – கிளிமங்கலம் இடையே வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் இப்பகுதி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. அவ்வப்போது ஆற்றில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மட்டும் செய்து வருகின்றனர். தடுப்பணை கட்டியபாடில்லை.

எனவே, விவசாயிகள் நலன்கருதி வெண்கரும்பூர் வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement