துக்காராம் முண்டேவைத் தொடர்ந்து ரோஷன் ஜேக்கப்; உ.பியில் உணவுக் கலப்படத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை

13


நமது நிருபர்




மஹாராஷ்டிராவில் துக்காராம் முண்டே போல, உத்தரபிரதேசத்திலும் உணவுக் கலப்படத்திற்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ரோஷன் ஜேக்கப் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மஹாராஷ்டிரா மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையராக உள்ள துக்காராம் முண்டே உணவுப் பொருளில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி ரோஷன் ஜேக்கப் உபியில் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உளள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையராக உள்ள டாக்டர் ரோஷன் ஜேக்கப், மாநிலத்தில் கலப்படத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக, கலப்பட பால் மற்றும் போலி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் கடும் சோதனைகளை நடத்தி வருகிறார்.

இதில் ரூ. 11.66 கோடி மதிப்பிலான கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி 63.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்து, ரோஷன் ஜேக்கப் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அழித்தனர்.

சமீபத்தில் மதுராவில் 1,500 கிலோ போலி பன்னீரையும், இன்று சம்பாலில் 4,500 கிலோ ரசகுல்லாக்களையும் இவரது குழுவினர் பறிமுதல் செய்தனர். உணவுக் கலப்படத்திற்கு எதிராக, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆய்வுகள், ரெய்டுகள் மற்றும் உணவு பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தில் உணவுக் கலப்படம் செய்பவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் பொது இடங்களில் குறிப்பிடவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இதே போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

துக்காராம் முண்டேவை தொடர்ந்து, ரோஷன் ஜேக்கப் உணவகங்களில் நடத்தி வரும் சோதனை தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது அதிரடி நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.



யார் இந்த ரோஷன் ஜேக்கப்?

* 1978 செப்டம்பர் 25ம் தேதி பிறந்த ரோஷன் ஜேக்கப், உத்தரப் பிரதேசத்தின் 2004ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

* இவர் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்; ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.

* தற்போது இவர் உத்தரப் பிரதேச அரசின் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.


* இந்தப் பதவியில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி முதல் உள்ளார். இதற்கு முன்னர் பல்வேறு முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார்.

Advertisement