அமெரிக்க வரி விதிப்புக்கு தக்க பதிலடி கொடுப்போம்; கனடா பிரதமர் திட்டவட்டம்
ஒட்டாவா: ''வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகள் ஏற்க முடியாதவை. அவர்களது வரி விதிப்புக்கு ஏற்ற வகையில், தக்க வரி விதிப்பை செய்து கனடாவும் பதிலடி கொடுக்கும்,'' என்று பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா -கனடா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர பேச்சில் அமெரிக்கா கொண்டு வந்த சில மாற்றங்களால், வர்த்தக பேச்சை கனடா ரத்து செய்தது. இதையடுத்து, கனடாவின், 1.90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா, 50 சதவீதம் வரிகளை விதித்தது. இது தொடர்பாக பிரதமர் மார்க் கார்னி அளித்த பேட்டி:
டிரம்பின் 50% சுங்க வரி, கனடா மீது நடத்தப்படும் தாக்குதல். இப்போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நடக்கிறது. அவர்கள் வரி விதிப்புக்கு ஏற்ற வகையில், செப்டம்பர் 8ம் தேதி முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது "டாலருக்கு டாலர்" என்ற விகிதத்தில் வரி விதித்து பதிலடி கொடுப்போம். அமெரிக்கா வரிகளை கணிசமாகக் குறைத்தால், அமெரிக்க அலுமினியம், எஃகு மற்றும் மோட்டார் வாகனங்கள் மீதான வரிகளை நீக்க தயாராக இருக்கிறோம். அமெரிக்க மதுபான விற்பனையை மீண்டும் தொடங்க மாகாணங்களை ஊக்குவிக்க கனடா தயாராக இருக்கிறது.
டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த இறுதி நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர்கள் மிக அதிகமாகக் கேட்டு, மிகக் குறைவாகவே வழங்கினார்கள். அவர்கள் முன்வைத்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்கள் கேட்டதையும் நாங்கள் கொடுக்க மாட்டோம். கனடாவின் இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ளவோ, எங்களின் முக்கியத் தொழில்துறைகளைச் சீர்குலைக்கவோ நாங்கள் தயாராக இல்லை.
வர்த்தகப் போர், அமெரிக்காவுடனான உறவில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் குறிக்கிறது; அமெரிக்கா மாறிவிட்டது என்பதை நாங்கள் தொடக்கத்திலிருந்தே உணர்ந்துள்ளோம். அவர்கள் செய்யும் ஒப்பந்தங்கள் நம்பகத்தன்மையற்றவை என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். அமெரிக்காவுடன் மீண்டும் பழைய உறவு திரும்ப வாய்ப்பு இல்லை. இவ்வாறு மார்க் கார்னி கூறினார்.
மேலும்
-
திருவாடானை கோயிலில் முகூர்த்த நாள் கூட்டம்
-
செய்தி சாரல்
-
‘காந்திபுரம் மேம்பாலத்தில் இறங்குதளம் என்னவானது?’
-
2029ல் லோக்சபா தேர்தலுடன் 22 மாநில சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த பரிசீலனை!
-
எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
கார் பந்தயத்தில் விபத்து; அஜித் காயமின்றி தப்பினார்