தெருவில் ஒடும் கழிவு நீர், திறந்த வெளி அவலம், ரேஷனுக்கு அலைச்சல், --சிரமத்தில் புத்துார் ஊராட்சி மக்கள்
ராஜபாளையம்:
திறந்த வெளி அவலம், ரேஷனுக்கு அலைச்சல், குடியிருப்பு நடுவே கழிவு நீர், நாய் தொல்லை என புத்துார் ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்துார் ஊராட்சியில் வாழவந்தாள் புரம், புத்துார், வேதநாயகபுரம், மேட்டுப்பட்டி, இந்திரா காலனி கிராமங்கள் உள்ளன.
புத்துார் கிராமத்தில் தேவியாற்று நீர் செல்லும் பாதையை தூர் வாராததால் புதர் மண்டி வெள்ளத்தின் போது சிக்கல் ஏற்படுகிறது. ஆக்கிரமித்துள்ள செடிகள், புதர்களை அகற்ற வேண்டும்.
புத்துாரில் மயானத்திற்கான பாதை, மயான எரிமேடை பயன்படுத்த முடியாத அளவு சேதம் அடைந்துள்ளது. மேட்டுப்பட்டி கிராமம் தாய் கிராமத்தை விட்டு அருள் புத்துார், நல்லமங்கலம் ஊராட்சி இடையே தொலைதுாரத்தில் அமைந்துள்ளது. கிராமத்தில் ரேஷன் கடைக்கு என ஒரு கிலோமீட்டர் தொலைவு அலைய வேண்டியுள்ளது.
வேதநாயகபுரத்தில் மெயின் ரோடு செல்ல சுலப பாதையாக ஆமைக்குடி கண்மாய் ஒட்டிய பாதை உள்ளது. மண் தரையாக உள்ளதால் மழை நேரம் சகதியாக மாறி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
துணை கிராமங்களில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்படாததால் பெண்களுக்கு திறந்த வெளி சிக்கலுடன் பாதுகாப்பற்ற அவலம் நீடிக்கிறது. பொது கழிப்பறை வசதியை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர்.
வேதநாயகபுரம், மேட்டுப்பாளையம் கிராமங்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் சப்ளை வசதி எதிர்பார்த்துள்ளனர். கண்மாய், ஆற்றுப்பகுதியாக இருப்பதால் பராமரிப்பற்ற நாய்கள் பெருகி குடியிருப்பு வாசிகளுக்கு தொல்லை அதிகரிக்கிறது. கொசுக்களின் தொந்தரவால் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குப்பைகள் முறையாக வெளியேற்றி, புதிய குடியிருப்புகளுக்கு தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும்.
நோய் தொற்று அபாயம்:
வேதநாயகபுரத்தில் புதிதாக போட்ட தெருவில் கழிவு நீர் வடிகால் அமைக்காததால் தெருவின் நடுவே குடியிருப்பு கழிவு நீர் ஓடுகிறது. இதில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி கொசு தொல்லையுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது. விடுபட்ட பகுதிகளுக்கு புதிதாக அமைக்கும்போது வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
பிரேமா, கூலித்தொழிலாளி.
திறந்தவெளி அவலம்:
கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் போதிய அளவில் அமைக்கப்படவில்லை. கிராமங்களில் அமைப்பதற்கான இடமில்லை என அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர். வேறு வழியின்றி பெண்கள் திறந்த வெளியை நாடுகின்றனர். இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழலும், விஷ பூச்சிகள் தீண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வண்ணமுத்து, குடியிருப்பாளர்.
திறந்த வெளி பாராக கட்டடங்கள்:
புத்துாரில் ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி, நுாலகம், ரேஷன் கடை உள்ளிட்ட 6 அரசு கட்டிடங்கள் ஒரே இடத்தில் உள்ளது. இரவு, விடுமுறை காலங்களில் குடி மகன்களின் திறந்தவெளி பாராக பயன்படுத்தி காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் கேன்கள் நிறைந்து விடுகின்றன. ஒரே பகுதியில் அமைந்துள்ள அரசு கட்டடங்களுக்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும்.
ராமர், கூலி தொழிலாளி.
குடிநீர் தொட்டி வேண்டும்:
வேதநாயகபுரத்தில் ஏற்கனவே இருந்த மேல்நிலை தொட்டி அகற்றி சிறிய தொட்டி வைத்துள்ளனர். மின்தடை ஏற்பட்டால் சப்ளை பாதிக்கிறது. பலமுறை கோரிக்கை வைத்து விட்டோம். மேல்நிலை தேக்க தொட்டி அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
மரியாள், குடும்பத் தலைவி.