நகராட்சிகளில் வரிவசூல் ‘கெடுபிடி’ வருவாய் உதவியாளர்கள் புலம்பல் 

நகராட்சிகளில் பணிபுரியும் வருவாய் உதவியாளர்கள், தினந்தோறும் வரிவசூல் இலக்கினை முடிக்க வேண்டும் என அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக புலம்பி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில், தொடர் இலக்கு அடிப்படையில் வரி வசூல், நோட்டீஸ் வழங்குதல், ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பணிகளை, வருவாய் உதவியாளர்கள் செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் பல்வேறு பணிகள் வழங்கப்பபடுவதால், அதிக பணிச்சுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருவதாக வருவாய் உதவியாளர் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். 

இதனால் பலர் மனஅழுத்தம், உடல் சோர்வு ஏற்பட்டு குடும்ப வேலைகளை கவனிக்க நேரமின்றி பணியில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வருவாய் உதவியாளர்களின் பணிச்சுமையை குறைத்து, பணியாளர்களிடம் நியாயமான அணுகுமுறையை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் என வருவாய் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுதும், நகராட்சி அலுவலக வருவாய் உதவியாளர்கள் அவதிப்படுவதாக புலம்பி வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் வரும் 27 ம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். 

Advertisement