பட்டாசு ஆலைகளை திறக்க பெசோ அலுவலகம் முற்றுகை

சிவகாசி, ஆக. 25 -

பட்டாசு ஆலைகளில் நடந்து வரும் விபத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், தொழிலகப் பாதுகாப்புத் துறை, போலீசார், தீயணைப்பு துறை அடங்கிய குழுவினர், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை (பெசோ) ஆலைகளில் ஆய்வு செய்ததில் 300 க்கும் மேற்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. ஆலைகள் மூடப்பட்டிருந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதற்கிடையே தொடர் போராட்டம் காரணமாக 70 சதவீதம் ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் பெசோ அதிகாரிகளால் மூடப்பட்ட 80 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி பட்டாசு கூலி தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெண் தொழிலாளர்கள் பெசோ அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் பட்டாசுத் ஆலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு வாரத்திற்குள் அலைகளை திறக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என தொழிலாளர்கள் கூறினர்.

Advertisement