உத்திரமேரூரில் சேதமடைந்த தெரு பெயர் பலகைகள்; புதிதாக அமைக்க மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில், சேதம் அடைந்துள்ள தெரு பெயர் பலகைகளுக்கு பதிலாக புதிதாக அமைக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், தெற்கு ரெட்டி தெரு, கருணீகர் தெரு, தண்டுகார தெரு, வெள்ளைச்செட்டி தெரு, மிஷின் ஸ்கூல் தெரு, ஆனைக்கட்டி தெரு, வாழைத்தோட்ட தெரு, சின்ன நாரசம்பாட்டை தெரு, பெரிய நாரசம்பாட்டை தெரு, செங்குந்த பிள்ளையார் கோவில் தெரு, வண்டிக்கார தெரு, பழைய ஆஸ்பத்திரி தெரு என, நுாற்றுக்கணக்கான தெருக்கள் உள்ளன.

இங்கு, பல ஆண்டு களுக்கு முன், தெருமுனை அருகிலுள்ள வீட்டுச் சுவரில் பெயின்ட் மற்றும் தகரத்தில் தெரு பெயர்களை எழுதி அமைத்தனர்.

சிரமம் தற்போது, பெரும்பாலான இடங்களில் சுவரில் எழுதப்பட்டுள்ள தெரு பெயர்கள் அழிந்து உள்ளன. இதனால், தெருக்களின் பெயர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பகுதியில் இருந்து உத்திரமேரூருக்கு வரும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தெருக்களின் பெயர் தெரியாமல் திணறுகின்றனர்.

மேலும், வெளியூர் கிராம மக்கள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கு தெருக்களின் பெயர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பேரூராட்சி நிர்வாகம் அனைத்து தெருக்களுக்கும் புதிய தெரு பெயர் பலகை அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement