கத்தியை காட்டி மிரட்டி முதியவரிடம் வழிப்பறி 

விழுப்புரம்:  விழுப்புரம் அருகே முதியவரிடம், கத்தியை காட்டி மிரட்டி தங்க மோதிரத்தை மர்ம கும்பல் பறித்து சென்றது.

விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த காணைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து,80; ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்.

இவர், வழக்கம் போல் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீட்டிலிருந்து காணை கடை வீதியில் உள்ள ஒரு கடைக்கு, டீ குடிக்க நடந்து வந்தார். அங்கு டீ குடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றார். அப்போது, டீ கடையிலிருந்து பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவருடைய பேரனின் நண்பர்கள் எனக்கூறி, வீட்டில் விட்டு செல்வதாக, பைக்கில் அழைத்து சென்றனர்.

காணையிலிருந்து, அருகே உள்ள காங்கேயனுார் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அழைத்து சென்ற அவர்கள், ஆளில்லாத ஏரிக்கரை பகுதியில் பைக்கை நிறுத்தி, அவரை கீழே இறக்கிவிட்டு மிரட்டி, தாக்கி, 2 கிராம் தங்க மோதிரத்தை பறித்து சென்றனர்.

காணை போலீஸ் ஸ்டேஷனுக்கு மிக அருகே நடந்த வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்

Advertisement