கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்

திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் மலையாள மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. மலையாள வருடத்தின் கொல்லவர்ஷத்தின் சிங்கம் மாதத்தில் துவங்கி திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னரை வரவேற்று வீடுகளின் வாசலில், பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, சத்யா உணவை உறவினர்களுடன் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, வயநாட்டின் இரூலம் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து, இரவோடு இரவாக அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 25,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான பூக்கோலத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் பூக்கோலத்திற்காக, கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 10,000 கிலோ மலர்கள் பயன்படுத்தப்பட்டன.

இரூலம் கிராம மக்களுக்கு பரீட்சையமான 'மணியன்' என்ற காட்டு யானையின் நினைவாக, அதன் உருவம் இந்தப் பூக்கோலத்தின் மையத்தில் அமைக்கப்பட்டது.

கேரளா மட்டுமல்லாது, அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த பண்டிகை களைகட்டியுள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் மலையாளிகள் அதிகம் வசிப்பதால், இங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல்வர் வாழ்த்து

முதல்வர் விஜய் அறிக்கை; உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement