அதிகாரிகள் உத்தரவை அவமதிக்கும் ஊழியர்கள்

மேலுார்: நாவினிப்பட்டியில் அரசு பஸ்களை நிறுத்த மேலாளர் உத்தரவிட்டும் டிரைவர்கள் நிறுத்த மறுப்பதால் மக்களின் பயணம் கேள்விக்குறியாகி வருகிறது.

மேலுாரில் இருந்து தஞ்சாவூர், காரைக்குடி, தேவகோட்டை உள்பட பல பகுதிகளுக்கு நாவினிப்பட்டியை கடந்து செல்ல வேண்டும். இவ் ஊராட்சியில் 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கிருந்து கல்லுாரி படிப்பு, மருத்துவமனை, ஆசிரியர் வேலை மற்றும் அத்யாவசிய பொருட்கள் வாங்க தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியூர் செல்கின்றனர். நாவினிபட்டியில் பஸ்களை நிறுத்தும் அதிகாரிகளின் உத்தரவை ஊழியர்கள் அவமதிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சமூக ஆர்வலர் சம்சுதீன் கூறியதாவது: நாவினிபட்டியில் பஸ்களை நிறுத்த கும்பகோணம் கோட்ட மேலாளர் 2019 ல் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் பஸ் ஊழியர்கள் நிறுத்துவதில்லை. அதனால் வெளியூர் சென்று திரும்புவோர், மேலுார் சென்று மீண்டும் 4 கி.மீ., தொலைவில் உள்ள ஊருக்கு ஆட்டோவில் பயணித்து வருகின்றனர். இரவில் திரும்புவோருக்கு காலம், பணம் விரயமாவதோடு பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை உள்ளது. அதனால் கும்பகோணம் போக்குவரத்து அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு பஸ் ஊழியர்களிடம் நாவினிபட்டியில் நிறுத்த உத்தரவிட்டுள்ளோம். பஸ்சை நிறுத்த மறுத்தால் 94878 98090 ல் புகார் தெரிவிக்கலாம். பஸ்சை நிறுத்தாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Advertisement